Sep 27, 2026 - 10:37 PM

திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தென்னிலங்கை மற்றும் வடக்கிலுள்ள ஒரு சில அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் லாபங்களுக்காக மக்களிடையே மீண்டும் இனவாதம், மதவாதம் மற்றும் பிளவுகளை ஏற்படுத்த முயல்கின்றனர்.
தென்னிலங்கையில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், சட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளதால் சிறைச்சாலையை எதிர்கொள்ளும் பயத்தில் அரசாங்கத்தை வீழ்த்தவும், மீண்டும் இனக்கலவரங்களைத் தூண்டவும் முயற்சிக்கின்றனர்.
வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் உண்மைப் பிரச்சினைகளைப் பேசுவதையோ, மக்கள் நலத் திட்டங்களை வரவேற்பதையோ விடுத்து, கடந்த தேர்தலில் மக்கள் 'தேசிய மக்கள் சக்திக்கு' அளித்த ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் செயல்படுகின்றனர்.
திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
மாநகரசபை எடுக்க வேண்டிய தீர்மானங்களை எடுக்காத காரணத்தினாலேயே பொலிஸார் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மாநகரசபையும் பொலிஸாரும் தங்களின் எல்லைக்குட்பட்ட பணிகளைச் சரியாகச் செய்யாததன் விளைவே இதுவாகும். இச்சம்பவம் குறித்து ஆராய்ந்து, எதிர்காலத்தில் தேவையான உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.
இதேவேளை, திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என யாழ் மாநகர முதல்வர் விவேகானந்தராஜா மதிவதனி தெரிவித்தார்.
சிலை அகற்றப்பட்டமைக்கு தமிழரசு கட்சியும் உடந்தை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அது குறித்து விளக்கமளிப்பதற்காக இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
யாழ் மாநாகர சபை உறுப்பினர் ஒருவர் முன்வைத்த யோசனை ஒன்றுக்கு அமைய தற்காலிகமாக அந்த சிலையை வைக்கவும், நினைவேந்தல் நிகழ்வை நடத்தவும் சபை ஏகமனதாக தீர்மானித்திருந்ததாக குறிப்பிட்டார்.
சிலையை பொலிஸார் அகற்றியமைக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை எனவும், சிலையை அகற்றும் எண்ணம் தமிழசுக் கட்சிக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.































