Sep 29, 2026 - 10:35 PM

வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்சார் நிபுணர்களுக்கு நியாயமான மற்றும் நீதியான வரிக் கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
மொத்த அரச வரி வருவாய்க்கு எவ்வித பாதகமான தாக்கமும் ஏற்படாத வகையில், வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்சார் நிபுணர்களுக்கு நியாயமான வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக, இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்காக ஜனாதிபதியிடம் பல தொழிநுட்ப மற்றும் பகுப்பாய்வு ரீதியான முன்மொழிவுகளைத் தமது சங்கம் சமர்ப்பித்துள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் மிகவும் கடினமான கால கட்டங்களில் நாட்டிற்காகத் தமது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றிய வைத்தியர்கள் உள்ளிட்ட நிபுணர்களுக்கு, வரிக் கொள்கை தொடர்பாக விரைவான நிவாரணமும் நியாயமும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டில் அரசாங்கம் 5,400 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வரி வருவாயை ஈட்டியுள்ளதாகவும், இது நாட்டின் வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த வரி வருவாய் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE tax) முறையில் சில திருத்தங்கள் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்பட்ட போதிலும், 2025 ஆம் ஆண்டில் உழைக்கும் போது செலுத்தும் வரி வருவாய் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவினால் அதிகரித்துள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய வரி முறையின் கீழ் தமது சம்பளத்தில் சுமார் 36 சதவீதத்தை நேர்முக வரியாகச் செலுத்த வேண்டியுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக மறைமுக வரியாகவும் கணிசமான தொகையைச் செலுத்த வேண்டியுள்ளதால் வைத்தியர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையின் கீழ், நாட்டின் பெறுமதிமிக்க மனித வளத்தையும் அறிவையும் நாட்டிற்குள்ளேயே தக்கவைத்துக்கொள்வதற்கு நிலையான மற்றும் மூலோபாய ரீதியான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமானது என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அத்தகைய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் நாட்டின் பெறுமதிமிக்க தொழில்முறை மனித வளம் இழக்கப்பட்டு, இலங்கை "அறிவுப் பாலைவனமாக" மாறும் அபாயம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய, நாட்டின் வரி வருவாயைப் பாதுகாக்கும் அதேவேளையில், வைத்தியர்கள் உள்ளிட்ட நிபுணர்களுக்கு நியாயமான வரிச் சூழலை உருவாக்குவது அவசரத் தேவையாகும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.































