Oct 2, 2026 - 03:14 PM

அகிம்சையை உலகிற்குப் போதித்த மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை (காந்தி ஜெயந்தி) முன்னிட்டு, இன்று (02) யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்தியத் துணைத்தூதரகமும், சாந்தி சேவா சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், காந்தியடிகளின் அகிம்சை, உண்மை, அமைதி மற்றும் மனிதநேயக் கொள்கைகள் நினைவுகூரப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர், இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், சமயத் தலைவர்கள், சாந்தி சேவா சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) விழிப்புணர்வு ஓட்ட நிகழ்வும் இன்று காலை நடைபெற்றது. இந்தியாவின் 100 ஆவது சுதந்திர ஆண்டான 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவது, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்துவது இதன் நோக்கமாகும்.
யாழ். திருவள்ளுவர் கலாச்சார மையத்தில் ஆரம்பமான 5 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்த ஓட்டப்பந்தயம், பண்ணைக் கடற்கரையூடாகச் சென்று மீண்டும் கலாச்சார மையத்தைச் சென்றடைந்தது. இதில் யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ஸ்ரீசாய் முரளி உட்படப் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளின் நினைவுத் தூபியிலும் பிறந்த நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காந்தியின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கி.துரைராஜசிங்கம், காந்தி சேவா சங்கச் செயலாளர் க.பாரதிதாசன், மாவட்டச் சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத் தலைவர் உ.உதயகாந்த், வர்த்தகச் சங்கச் செயலாளர், சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் அமைப்பின் மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும், இதன் போது இலங்கை காந்தி சேவா சங்கத்தினால் வெளியிடப்பட்ட "காந்தியம்" சிறப்பு மலரை, அதன் பிரதம ஆசிரியர் எம். ஷாந்தன் சத்தியகீர்த்தி வெளியிட்டு வைக்க, அதன் முதல் பிரதியை அதிதிகள் பெற்றுக் கொண்டனர்.































