Oct 2, 2026 - 04:43 PM

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கி வந்த 55 வயதுடைய விரிவுரையாளர் ஒருவர், அம்பாறை பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேகநபரான குறித்த விரிவுரையாளர், தேசிய கல்விக் கல்லூரிக்கு மதிப்பெண்கள் (Marks) வழங்கும் முக்கிய பொறுப்பில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக, தாம் இது குறித்து வெளியில் முறைப்பாடு அளித்தால் தங்களது மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு கல்வி வாழ்க்கை பாழாகிவிடும் என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் நீண்டகாலமாக மௌனம் காத்து வந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சிக்குக் கிடைத்த ரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் ஆசிரிய பயிற்சி மாணவிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், அம்பாறை மாவட்ட மகளிர் பணியகத்தின் விசேட பொலிஸ் குழுவினர் நேற்று (01) சந்தேகநபரான 55 வயதுடைய விரிவுரையாளரைக் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று (02) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அம்பாறை மாவட்டப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சியின் வழிகாட்டலிலும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரிலும் மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அம்பாறை மாவட்ட மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே, பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.டி.பி. தரங்கா, பொலிஸ் சார்ஜென்ட் வீரசிங்க (37387), பொலிஸ் கொன்ஸ்டபிள் சந்திகா (12830), பெண் பொலிஸ் சார்ஜென்ட் துஷாரி (3573) மற்றும் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள்களான உஷானி (10237), சச்சினி (10686) ஆகியோர் அடங்கிய விசேட பொலிஸ் குழுவினர் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.































