Nov 25, 2026 - 11:24 AM

இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த விரதங்களுள் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா நாட்டின் கிழக்கு மாகாணம் மற்றும் மலையகப் பகுதிகளில் அமைந்துள்ள இந்து ஆலயங்களிலும் பொதுமக்களின் வீடுகளிலும் மிகுந்த பக்திபூர்வமாகவும் பாரம்பரிய முறைப்படியும் கொண்டாடப்பட்டது.
கார்த்திகை மாதப் பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் இணையும் இப்புனித நாளில், சிவபெருமானின் ஜோதி வடிவத்தைப் போற்றுவதையும், இருள் நீங்கி வாழ்வில் ஒளியும் சுபீட்சமும் பெருக வேண்டும் என்ற உயரிய நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு இத்திருநாள் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பக்தர்கள் தமது வீடுகள், முற்றங்கள் மற்றும் ஆலய வளாகங்களில் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி இறைவழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அன்னதானம் உள்ளிட்ட தர்ம காரியங்களையும் முன்னெடுத்தனர்.
இதன்போது, கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகையை முன்னிட்டு சுவாமிக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சுவாமி ஊர்வலமாக எழுந்தருளி ஆலய முன்றிலில் அமைக்கப்பட்டிருந்த 'சொக்கப்பனை' எரிக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு, சம்மாந்துறை, பெரியநீலாவணை, கல்முனை, பாண்டிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கொட்டும் அடைமழை மற்றும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் மக்கள் சிரமங்களைப் பொருட்படுத்தாது ஆலயங்களிலும் வீடுகளிலும் தீபங்களை ஏற்றி உற்சாகத்துடன் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, மலையகத்தின் தோட்டப்புற ஆலயங்களும் கார்த்திகை தீபத் திருவிழாவால் ஒளிமயமாகக் காட்சியளித்தன. நுவரெலியா மாவட்டத்தின் பிரசித்திபெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட அபிஷேக பூஜைகளும், தீய சக்திகள் நீங்கி உலகில் நன்மை பெருக வேண்டும் எனப் பிரார்த்திக்கும் 'சொக்கப்பனை' தீ மூட்டும் பாரம்பரிய சடங்கும் பக்திபூர்வமாக நடைபெற்றன.
நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்ற இவ்விசேட சமய நிகழ்வுகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டு, உலக மக்கள் அனைவரும் நோய்நொடியின்றி ஆரோக்கியத்துடனும், அமைதி மற்றும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் எனப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

































