Oct 3, 2026 - 09:29 AM

உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இலங்கையில் வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி வரவழைத்து, அவரைப் பலவந்தப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கொழும்பிலுள்ள விடுதி ஒன்றில் உஸ்பெகிஸ்தான் பெண் ஒருவரை பாலியல் தொழிலுக்காகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், தண்டனைச் சட்டக்கோவையின் 360 அ (1) பிரிவின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அந்த பெண்ணுக்கு இலங்கையில் வசித்து வந்த அவரது நாட்டைச் சேர்ந்த ஜெஸ்மின் என்ற பெண் ஒருவரின் மூலம் கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு யோசனை கிடைத்துள்ளது.
மாதத்திற்கு 1,500 அமெரிக்க டொலர் சம்பளத்தில் வேலை அல்லது குழந்தைகளைப் பராமரிக்கும் பணி தருவதாக வாக்குறுதி அளித்து, குறித்த பெண் அனுப்பிய விமானச்சீட்டு மற்றும் விசா மூலம் அவர் இலங்கை வந்தடைந்தார்.
அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்ததும், இலங்கையிலுள்ள ஜெஸ்மின் என்ற குறித்த பெண்ணும் அவரது கணவரான 'லாரன்ஸ்' என்ற இலங்கை முச்சக்கரவண்டி ஓட்டுநரும் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று நீர்கொழும்பு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கவைத்தனர்.
அன்றைய தினமே அவரைப் பலவந்தமாக வெளிநாட்டவர் ஒருவருக்குப் பாலியல் சேவைக்காக விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர், வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அவரைத் தங்கவைத்து, கடவுச்சீட்டைப் பறித்துக் கொண்டதுடன் எந்தவொரு தொடர்பாடல் வசதியும் வழங்காமல் தங்களது முழுமையான கட்டுப்பாட்டில் அவர்கள் வைத்திருந்தனர்.
இந்தச் சித்திரவதையைத் தாங்க முடியாத குறித்த பெண், இரகசியமாகத் தனது தாயாருக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் உஸ்பெகிஸ்தான் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
அதன்பின்னர், இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தீவிர நடவடிக்கை மேற்கொண்டு அந்தப் பெண்ணை மீட்டு தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பியது.
வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர் தான் நிரபராதி எனக் கூற முயன்ற போதிலும், வங்கி அறிக்கைகள் உட்பட பலமான சான்றுகள் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
குறிப்பாக, 2020 டிசம்பர் 31 ஆம் திகதியன்று கொழும்பு விடுதியில் பாலியல் சேவை பெற்ற நபர் வழங்கிய பணத்தின் ஒரு பகுதி, லாரன்ஸின் தனிப்பட்ட வங்கி கணக்கில் வைப்பு செய்யப்பட்டமை வங்கி அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
முறைப்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றம் எனத் தீர்மானித்த மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.































