Oct 3, 2026 - 10:42 AM

சர்வதேச அளவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், 100 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் டீசலை சந்தைக்கு வெளியிட ஜி-7 (G7) உறுப்பு நாடுகள் தீர்மானித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிலிருந்து டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்போவதாக எச்சரித்திருந்த நிலையில், இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரவிருக்கும் நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க நுகர்வோருக்கான டீசல் விலையைக் குறைக்கும் நோக்கில் ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
எனினும், ஜி-7 தலைவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் எரிபொருள் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டாம் எனவும், சர்வதேச வலுசக்தி முகவரகம் (IEA) ஒருங்கிணைப்பின் கீழ் அடுத்த நான்கு மாதங்களில் 100 மில்லியன் பீப்பாய் இருப்பை கூட்டாக வெளியீடு செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளன.
இதில் முதல் 20 நாட்களில் கணிசமான அளவு டீசல் சந்தைக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக டீசல் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் டீசல் விலை லீற்றரொன்றின் 2 பவுண்ட்ஸ்களைத் தாண்டியுள்ளது.
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் தொடரும் நிலையில், ஜி7 அமைப்பின் இந்த நடவடிக்கை உலகளாவிய எரிபொருள் சந்தையை ஸ்திரப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.































