Oct 3, 2026 - 02:55 PM

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையின் ஜோர்டான் பள்ளத்தாக்கிலுள்ள 'ராஸ் அல்-அஹ்மர்' (Ras al-Ahmar) என்ற பகுதியில் இஸ்ரேல் அமைத்து வரும் இராணுவத் தடுப்புச் சுவர் காரணமாக, அங்கு வாழும் பாலஸ்தீனிய பெடோயின் சமூகத்தினர் குடிநீர், கால்நடைத் தீவனம், மருத்துவ வசதி மற்றும் கல்வி வாய்ப்புகளை இழந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
'கிரிம்சன் த்ரெட்' (Crimson Thread) என இஸ்ரேலால் அழைக்கப்படும் இந்தத் தடுப்புச் சுவர், வடக்கு ஜோர்டான் பள்ளத்தாக்கு வழியாக சுமார் 20 கிலோமீற்றர் தூரத்துக்கு அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் இராணுவ வீதிகள், அகழிகள் மற்றும் மண்மேடுகள் அடங்கியுள்ளன.
இந்த கட்டுமானப் பணிகளால் அந்தப் பகுதியிலுள்ள குடிநீர்க் கிணறுகள், நீர் விநியோகக் குழாய்கள் மற்றும் விவசாய நிலங்கள் பெரும் சேதமடைந்துள்ளன.
செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் தங்களது பகுதிக்குச் செல்லும் பாதைகளை முடக்கி, நிலங்களை ஆக்கிரமித்துச் சுவரை விரிவுபடுத்தி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாகத் தங்களது பகுதிக்குக் குடிநீர் ஏதும் கொண்டுவரப்படவில்லை என்றும், இதனால் தங்களது சுமார் 15,000 கால்நடைகள் கடுமையான நீர்ச்சத்து குறைபாட்டால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கிராமவாசி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இஸ்ரேலிய இராணுவத்தினர் மற்றும் குடியேற்றவாசிகளின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, அப்பகுதி மக்கள் இரவு வேளைகளில் கழுதைகளைப் பயன்படுத்தித் தண்ணீர், தீவனம் மற்றும் பாலை இரகசியமாகக் கடத்திச் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வாகனங்கள் எதுவும் இப்பகுதிக்குள் வர முடியாதவாறு பாதைகள் மறிக்கப்பட்டுள்ளதால், கடந்த இரண்டு வாரங்களாக 51 பாடசாலை மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.































