Oct 3, 2026 - 01:45 PM

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது.
நிஷின் (Nisshin) நகரில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களைக் குவித்தது.
அதிரடியாக ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா 61 ஓட்டங்களையும், திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் விளாசினர்.
பந்துவீச்சில் அரபாத் மின்ஹாஸ் மற்றும் அஹமட் டானியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
212 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களை மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் ஹசன் நவாஸ் அதிரடியாகப் போராடி 51 பந்துகளில் 96 ஓட்டங்களை குவித்தார்.
சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிவம் தூபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இந்தப் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்ற பாகிஸ்தான் அணி வெள்ளிப்பதக்கத்தை தமதாக்கிக் கொண்டது.































