Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
அடுத்தடுத்த நாட்களில் நீதிமன்றில் ஆஜராகும் ஞானசார தேரர்

Oct 4, 2026 - 09:35 PM

அடுத்தடுத்த நாட்களில் நீதிமன்றில் ஆஜராகும் ஞானசார தேரர்
Mobitel Inner 1278

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று (04) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது. 

அவரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்ற உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், நீதிமன்றத்தின் அனுமதியின்றி உரையாற்றியமை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டு நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டி, அப்போதைய ஹோமாகம நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்திருந்தார். 

அந்த முறைப்பாட்டை விசாரித்த அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் குழாம், 2018 ஆம் ஆண்டு மே 24 ஆம் திகதி, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரரைக் குற்றவாளியாகக் கண்டு, அவருக்கு 19 வருடக் கடூழியச் சிறைத்தண்டனையை விதித்ததுடன், அந்தத் தண்டனையை 6 வருடங்களில் அனுபவித்து முடிக்கும் வகையில் தீர்ப்பளித்தது. 

எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினார். 

இதற்கு எதிராக பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட சில தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னர், அது தொடர்பான தீர்ப்பு அண்மையில் அறிவிக்கப்பட்டது. 

இதன்போது, ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுவிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம் சட்டத்தின் முன் செல்லுபடியற்றது என உத்தரவிடப்பட்டது. 

எவ்வாறாயினும், பொதுமன்னிப்பு செல்லுபடியற்றதாக ஆக்கப்பட்ட போதிலும் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்ததுடன், அந்த மனு கடந்த 29 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 

அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த பிரதிவாதியான கலகொடஅத்தே ஞானசார தேரர் அன்றைய தினமும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அதற்கமைய, பிரதிவாதியான தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்தது. 

அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்த நீதிமன்றம், குறித்த பிடியாணையைப் பொலிஸ் மா அதிபர் ஊடாகச் செயற்படுத்துமாறும், கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டது. 

குறித்த பிடியாணைக்கு அமைய, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று (03) இரவு கைது செய்யப்பட்டார். 

அவர் களுத்துறை, தீனியாவல பகுதியில் உள்ள வன ஆச்சிரமம் ஒன்றில் தங்கியிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்றிரவு கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார். 

விசாரணை அதிகாரிகளின் பொறுப்பிலிருந்த அவர், இன்று நண்பகல் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

இதன்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடயங்களைத் தெளிவுபடுத்துகையில், சந்தேக நபரான ஞானசார தேரர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமையவே கைது செய்யப்பட்டு முன்னிலைப்படுத்தப்படுவதாகத் தெரிவித்தனர். 

அவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் இதன்போது சுட்டிக்காட்டினர். 

அந்த சந்தர்ப்பத்தில் பிரதிவாதியான ஞானசார தேரர் சார்பில் சட்டத்தரணி பசான் கருணாரத்னவுடன் முன்னிலையான சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன நீதிமன்றத்தில் விடயங்களைத் தெளிவுபடுத்துகையில், தனது கட்சிக்காரரான தேரர் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளமையாலேயே அவர் ஆச்சிரமத்திற்கு சென்று அங்கு தங்கியிருந்ததாகக் குறிப்பிட்டார். 

அவருக்கு விசேட பாதுகாப்பினை வழங்குமாறு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அதற்கமைய சிறைச்சாலைக்குள் அவருக்கு விசேட பாதுகாப்பினை வழங்குவதற்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் கோரினார். 

முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்ட மேலதிக நீதவான், பிரதிவாதியான ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

அதற்கமைய, ஞானசார தேரரை மேன்முறையீட்டு நீதிமன்றத்திலுள்ள பிடியாணைக்காக நாளை அந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டதுடன், கொழும்பு மேல் நீதிமன்றத்திலுள்ள பிடியாணைக்காக நாளைமறுதினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார். 

அதற்கு மேலதிகமாக, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலுள்ள பிடியாணைக்காக எதிர்வரும் புதன்கிழமை அவரை அந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

அத்துடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் பாதுகாப்புத் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதவான் இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினம்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை அமர்வைப் புறக்கணித்த உறுப்பினர்கள்!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

Mobitel 1278