Oct 5, 2026 - 03:53 PM

இலங்கையின் முதலாவது தேசிய AI விருது வழங்கும் நிகழ்வும், இலங்கை AI வாரம் 2026 இன் முதன்மை நிகழ்வுமான தொடக்க விழா தேசிய AI விருதுகள் 2026 2026 செப்டம்பர் 30 அன்று Monarch Imperial வளாகத்தில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவுடன் நிறைவுற்றது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் SLT-MOBITEL ஆகியன இணைந்து முன்னெடுத்த இந்த செயற்திட்டமானது, AI இன் கண்டுபிடிப்புகள், ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்றங்களைக் கொண்டாடும் வகையில் AI Hackathon, AI தலைவர்கள் இரவு, AI மாநாடு, AI கண்காட்சி மற்றும் தேசிய AI விருதுகள் ஆகிய ஐந்து வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது.
AI துறையில் இலங்கையின் மிகச்சிறந்த சாதனைகளைக் கௌரவிக்கும் வகையில் அமைந்த இத் தேசிய AI விருதுகள், சிறந்த AI தீர்வுகள், தலைவர்கள் மற்றும் திறமையாளர்களை அங்கீகரித்ததுடன், தேடல், உரையாடல் மற்றும் முன்னேற்றம் நிறைந்த ஒரு வார கால நிகழ்வின் உச்சக்கட்ட நிறைவாகவும் அமைந்தது. விருதகள் வழங்கும் நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, SLT Group தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா மற்றும் SLT-MOBITEL பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், முன்னணி கொள்கை வடிவமைப்பாளர்கள், தொழிற்துறை முன்னோடிகள் மற்றும் புத்தாக்கவியலாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
AI துறையின் ஆற்றல்மிகு திறமையை அங்கீகரிக்கும் வகையில் அமைந்த இத் தேசிய AI விருதுகள், விவசாயம், சுகாதாரம், வங்கித்துறை, கல்வி மற்றும் மேம்பட்ட நிறுவனசார் தீர்வுகள் போன்ற பல துறைகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தியிருந்தன. வெற்றிபெற்ற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் உயர்தரத் தரம், விரிவாக்கத்தன்மை மற்றும் தாக்கத்தைப் பிரதிபலிப்பதை உறுதிசெய்யும் வகையில், சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பமும் 19 அங்கத்தவர்களைக் கொண்ட சுயாதீன நடுவர் குழுவினால் மிகக் கடுமையாக மதிப்பீடு செய்யப்பட்டது.
தேசிய AI விருதுகள் விழாவில் மொத்தம் 64 விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதில் 19 தங்க விருதுகள், 14 வெள்ளி விருதுகள், 12 வெண்கல விருதுகள் மற்றும் 18 திறமைச் சான்றிதழ் விருதுகள் போன்றன உள்ளடங்கியிருந்தன. இவற்றுடன் ஆண்டின் சிறந்த இலங்கை AI உருமாற்றத் தலைவர் விருதின் தங்க விருது, Arimac நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிர பிரசாத் ஜயசிங்கவிற்கு வழங்கப்பட்டது. மேலும் அனைத்துத் துறைகளிலும் சிறந்த ஒட்டுமொத்த AI தீர்வுக்கான தேசிய AI சிறப்பமைவு விருது, Emojot UXI – Unified Experience Intelligence திட்டத்திற்காக Emojot (Pvt) Ltd. இற்கு வழங்கப்பட்டது.
தொழில்துறை சார்ந்த விருதுகள், விவசாயம், வங்கி, நிதி மற்றும் காப்புறுதி (BFSI), சுகாதாரம் மற்றும் உயிர் அறிவியல், உற்பத்தித் துறை (தொழில்துறை 5.0), கல்வி மற்றும் ஊடகம் ஆகிய துறைகளில் முன்னணியிலுள்ள AI பயன்பாடுகளை அங்கீகரித்தன. எதிர்காலத்தை நோக்கிய பிரிவுகளின் கீழ் சிறந்த AI தொடக்கப் புத்தாக்கம் / நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவுப் புத்தாக்கம் (Best AI Startup/MSME Innovation), சிறந்த முகவர் AI தீர்வு (Best Agentic AI Solution), சிறந்த சிங்கள/தமிழ் AI மற்றும் உள்ளூர்மயமாக்கல் புத்தாக்கம் (Best Sinhala/Tamil AI & Localisation Innovation), பல்கலைக்கழக AI புத்தாக்க விருதுகள், AI தலைமைத்துவத்தில் பெண்கள் (Women in AI Leadership) மற்றும் ஆண்டின் சிறந்த AI உள்ளடக்க உருவாக்குநர் (AI Content Creator of the Year) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கல்விசார் காணொளி மற்றும் கதைசொல்லல், சமூகத் தாக்கம், எதிர்கால தொழினுட்பம், கலாச்சார பாரம்பரியம் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த உள்ளடக்க உருவாக்குநர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தேசிய AI விருதுகள் 2026 என்பது AI துறையில் இலங்கையின் வளர்ந்து வரும் ஆற்றலுக்கு ஒரு சான்றாகும். பல துறைகள் மற்றும் மட்டங்களைச் சேர்ந்த புத்தாக்குநர்களை அங்கீகரிப்பதன் மூலம், தெற்காசியாவில் AI சிறப்பமைவுக்கான வளர்ந்து வரும் ஒரு மையமாக நாட்டின் நிலையை இவ்விருதுகள் மேலும் வலுப்படுத்துகின்றன.
தேசிய AI விருதுகள் 2026 ஐ வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஆதரவளித்திருந்த சகல விண்ணப்பதாரிகள், நடுவர்கள், மதிப்பீட்டாளர்கள், அனுசரணையாளர்கள், பங்காளர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் பங்காளர்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் SLT‑MOBITEL ஆகியன தமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றன.































