Oct 6, 2026 - 01:52 PM

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி. ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் கமல்ஹாசனின் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தனது ஆசையை அட்லி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மருதநாயகம்’ திரைப்படம் பல்வேறு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருந்த இந்தப் படம், இன்றளவும் தமிழ் சினிமாவின் நிறைவேறாத கனவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இந்தப் படத்தை இயக்குவது தனது நீண்டநாள் கனவு என்று அட்லி கூறியுள்ளார். அதற்குத் தேவையான மிகப்பெரிய பட்ஜெட் கிடைத்தால், கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ‘மருதநாயகம்’ படத்தை உருவாக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் சேதுபதி இந்தப் படத்தில் இணைந்தால், அவரது கதாபாத்திரமே படத்தின் முக்கியமான பலமாக மாறும் என்றும் அட்லி குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே ‘மருதநாயகம்’ படத்திற்காக ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கும் நிலையில், கமல் - விஜய் சேதுபதி - அட்லி கூட்டணி என்ற இந்தப் பேச்சு சினிமா ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.































