Oct 8, 2026 - 03:14 PM

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகிய நிலையில், அந்த பதவிக்கு குசல் மெண்டிஸ் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விசேட கலந்தரையாடலைத் தொடர்ந்து, தெரிவுக் குழுவினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, டெஸ்ட் தலைவராக குசலின் முதலாவது பணியாக அமையவுள்ளது.
குசல் மெண்டிஸ் இலங்கை டெஸ்ட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், இலங்கை டெஸ்ட் அணியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்ற 19ஆவது தலைவராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய ஒருநாள் மற்றும் இருபது20 அணிகளினதும் நிலையான தலைவராகச் செயற்படும் குசல், 2015ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சர்வதேச அறிமுகத்தைப் பெற்றார்.
31 வயதான குசல் இதுவரை 75 டெஸ்ட் போட்டிகளில் (139 இன்னிங்ஸ்கள்) விளையாடி 4,836 ஓட்டங்களைக் குவித்துள்ளாரென்பதுடன், அவரது திறமைகளில் 10 சதங்களும் 23 அரைச்சதங்களும் அடங்கும்.
இலங்கைத் தலைவராகச் செயற்பட்ட தனஞ்சய, உடனடியாகச் அமுலுக்கு வரும் வகையில் தலைவர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகக் கிரிக்கெட் நிறுவனம் இன்று காலை அறிவித்தது.
புதியவர்களுக்குச் சந்தர்ப்பம் அளிக்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும், தனஞ்சய டி சில்வா தொடர்ந்து ஒரு வீரராக அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.































