Oct 8, 2026 - 07:49 PM

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பயணமானது கிராமிய மக்களை நகரங்களுக்கு அழைத்து வராமல், கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, வசதிகளை வழங்குவதாகும் என்றும், இதன்போது கிராமத்திற்கும் நகருக்கும் இடையில் மிக மேம்பட்ட வீதித் கட்டமைப்பு, சிறந்த தொடர்பாடல் கட்டமைப்பு, செயற்திறனான மற்றும் வலுவான அரச சேவையை ஸ்தாபிப்பதே எமது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட 1,540 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில், இன்று (08) முற்பகல் அலரி மாளிகையில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் அரச சேவையைப் பெரிதும் மதிக்கின்ற அதேவேளை, அரச சேவையைச் சிறந்த சம்பள மட்டத்திற்குக் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு அரசாங்கம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனாலேயே மிக நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட அடிப்படைச் சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது என்றும் தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர் சேவைக்கு புதிய பிரமாணக் குறிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கிராம உத்தியோகத்தர் சேவை தரம் III இற்காகத் தெரிவுசெய்யப்பட்ட 1,540 அதிகாரிகளுக்கு முதன்முறையாக இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டன.
பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் நேர்முகத்தேர்வுகளின் திறமைகளை மாத்திரம் கருத்திற்கொண்டு தகுதியானவர்களை அரச சேவைக்கு உள்ளீர்க்கும் கொள்கைக்கு இணங்க, இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கிராம உத்தியோகத்தர் பதவிக்கென அவர்களுக்கே உரித்தான தனித்துவமான சேவையின் கீழ், அவர்களுக்கெனத் தனித்துவமான சம்பளக் கட்டமைப்போடு கிராம உத்தியோகத்தர் சேவையை மீள ஸ்தாபிக்க தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது, அந்த நேரத்தில் பெற்றுக்கொண்டிருந்த சம்பளத்தை விட சம்பள உயர்வுகளுடன், பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை போதுமான அளவு அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கு, மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற 28 பேருக்கு ஜனாதிபதியால் அடையாள ரீதியாக நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு மேலும் உரையாற்றுகையில்: இன்று நீங்கள் இலங்கையின் மிக முக்கியமான ஒரு தொழில் துறைக்குள் காலடி எடுத்து வைக்கிறீர்கள்.
நம் நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றும் அரச அதிகாரி யார் என்று கேட்டால், அது நமது கிராம உத்தியோகத்தர் தான் இருப்பார்கள்.
ஒரு கிராமத்தில் உள்ள சாதாரண மக்களின் வாழ்க்கைக்கும் அரசிற்கும் இடையிலான தொடர்பும், அரசினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் கிராம உத்தியோகத்தர்களை அடிப்படையாக கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன.
கிராமத்தைப் பொறுப்பேற்றுப் பணியாற்றும் ஒரு அதிகாரி என்ற வகையில் மாத்திரம் நீங்கள் எங்களுக்கு முக்கியமானவர்கள் அல்ல. நாங்கள் தயாரித்துள்ள பொருளாதார மற்றும் சமூக நோக்கின் காரணமாகவே நீங்கள் எங்களுக்கு முக்கியமானவர்களாகிறீர்கள்.
நகரங்களை மையமாகக் கொண்ட அதிகப்படியான மக்கள்தொகை காரணமாக உருவாகும் நெருக்கடியை உலகின் ஒவ்வொரு நாடும் இன்று எதிர்கொண்டு வருகிறது. இது இன்று உலகின் வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் நாடுகளும், வளர்ச்சியடையாத நாடுகளும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகும். கிராம மட்டத்தில் பொருளாதார வாய்ப்புகளையும் சேவைகளையும் வழங்குவதில் தோல்வியுடையும் போது, இலட்சக்கணக்கான மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களை நோக்கிச் சென்றனர். இது இன்று உலகின் பல நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்.
ஆனால், இந்தப் பிரச்சினையில் நாம் அதிர்ஷ்டம் செய்துள்ளோம். நம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இன்னும் கிராமப்புறங்களிலேயே வசிக்கிறார்கள்.
அப்படியானால் நமது பொருளாதார மற்றும் சமூகப் பயணம் என்னவாக இருக்க வேண்டும்? நமது பயணம் ஒருபோதும் கிராமப்புறங்களில் வாழும் மக்களை நகரங்களுக்கு அழைப்பதாக இருக்கக்கூடாது. அந்த வியூகம் தோல்வியடைந்துவிட்டது என்பது இப்போது தெளிவாகிறது.
அப்படியானால் நமது வளர்ச்சியின் பாதை, கிராமத்து மக்களை நகரத்திற்கு அழைப்பது அல்ல, மாறாக கிராமத்தில் உள்ள மக்களுக்கே கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் வசதிகளை வழங்குவதுமாகும்.
இதற்கு கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் மிகவும் மேம்பட்ட வீதிக் கட்டமைப்பு அவசியமாகும். அதுபோல கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் சிறந்த தகவல் தொடர்பு கட்டமைப்பு அவசியமாகிறது. அதற்காக எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் தகவல் தொடர்பு கட்டமைப்பை நிறுவ டிஜிட்டல் அமைச்சுடன் கலந்துரையாடி தீர்மானித்துள்ளோம்.
மேலும் கிராம மக்களுக்கு வழங்கும் சேவைகள் மிகவும் விரைவாகவும் எளிதாகவும் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே கிராமத்து மக்களை கிராமத்திற்குள்ளேயே வைத்து அவர்களின் பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே எமது எதிர்பார்ப்பாகும்.
இதன் போது கிராம உத்தியோகத்தர்களுக்குப் பெரியதொரு பொறுப்பு வருகிறது. அந்தச் சேவைகளை வழங்குவதில் வீட்டுக்கு வீடு செல்வதுடன், குடிமக்கள் வந்து கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் அலைக்கழிக்கப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
இருப்பினும், இந்த டிஜிட்டல் மயமாக்கல் செயல்பாட்டில், மனிதர்களுக்கிடையேயான மனிதநேய உறவுகளும் உணர்வுகளும் சிதைவடையாதவாறு ஒரு சமநிலையைப் பேணுவது மிக முக்கியமானதாகும்.
மேலும், அரச சேவையின் பணிகளை மூன்று வகைகளாகப் பிரித்து டிஜிட்டல் முறையில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர் மட்டத்திலேயே நிறைவு செய்யப்படும் பணிகள், கிராம உத்தியோகத்தர் வழங்கும் சான்றிதவலின் அடிப்படையில் பிரதேச செயலகத்தில் நிறைவு செய்யப்படும் பணிகள், கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரின் சான்றிதலின் அடிப்படையில் வேறு அரச நிறுவனத்தால் நிறைவேற்றப்படும் பணிகள் என, இதற்கான அவசியமான டிஜிட்டல் முறையை உருவாக்குவது தொடர்பாக டிஜிட்டல் அமைச்சும் பொது நிர்வாக அமைச்சும் கலந்துரையாடியுள்ளன.
அடுத்த ஆண்டு இரண்டு மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு முன்னோடித் திட்டமாக இதனைத் ஆரம்பிப்பதற்கான நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய எதிர்பார்க்கிறோம்.
மேலும் நமக்கு வலுவான அரச சேவை தேவைப்படுகிறது. உலகின் ஒவ்வொரு வளர்ந்த நாடும் வலுவான அரச சேவை மூலமாகவே முன்னேறியது. ஆனால் இன்று நமது அரச சேவையில் பணிபுரியும் அதிகாரிகளும் சேவைகளைப் பெறும் பிரஜைகளும் ஒரு திருப்திகரமான மனநிலையில் இல்லை. அரச சேவையில் பதவிகளுக்கும் நாற்காலிகளுக்கும் இடையிலான போட்டி உருவாகியுள்ளது.
அத்துடன் பழைய கணினிகள், பழைய வாகனங்கள் மற்றும் சேதமடைந்த கட்டடங்கள் காரணமாக அரச சேவை ஒருவித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக அரசாங்கமென்ற வகையில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அரச சேவைக்கு 1,750 கெப் வாகனங்கள் தேவை என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தேவையான வாகனங்களை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
டிஜிட்டல் மயமாக்கலுக்குத் தேவையான கணினிகள் மற்றும் உபகரணங்களை பொது நிர்வாக அமைச்சின் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரச நிறுவனக் கட்டடங்கள் புனரமைக்கப்பட வேண்டும். மேலும் புதிய கட்டடங்கள் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


































