Apr 13, 2026 - 12:52 PM -
0
சித்திரை தமிழ் புத்தாண்டு நாளை (14) பிறக்கவுள்ளது. 60 ஆண்டுகால சுழற்சியில் 40 வது வருடமான பராபவ ஆண்டு புதிய ஆண்டாக மலரவுள்ளது.
இந்த நாள் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் அருளும் இனிய நாளாக பார்க்கப்படுகிறது.
சித்திரை முதல் நாள் தமிழர் மரபுப்படி தமிழ் புத்தாண்டாக பல காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பராபவ முதல் நாளில் சூரியனின் கட்டத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார்.
ஏப்ரல் 14 செவ்வாய்க்கிழமை இந்த பராபவ ஆண்டு தொடங்குகிறது. இந்த நாளில் சூரியனை வணங்குவது மிகவும் அதிர்ஷ்டத்தை தரும் என்று சொல்லப்படுகிறது.
பல ஊர்களில் தமிழ்புத்தாண்டு அன்று சித்திரை கனி காணும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
அதாவது இந்த நாளில் ஒரு தாம்பாளத்தில், மாம்பழம், வாழைப்பழம், பலாச்சுளை, ஆப்பிள், தோடம்பழம் முதலான பழங்களை வரிசையாக வைப்பார்கள். மேலும், அதில், வெள்ளி, தங்கம், மஞ்சள், குங்குமம், பணம், கண்ணாடி உள்ளிட்டவற்றையும் வைத்து அடுக்கி வைப்பார்கள்.
புத்தாண்டு அன்று கண் விழித்ததும் பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் இந்த தாம்பாளத்தை தான் முதலில் பார்க்க வேண்டும் என்பது ஐதீகம்.
இதில் உள்ள கண்ணாடியில் நம் முகத்தை பார்த்துவிட்டு, பிறகு அடுக்கி வைத்திருக்கும், பழம், பணம், நகையை பார்க்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் சுப காரியங்கள் நடைபெறும் என்பது நம்பிக்கை.
மேலும் தமிழ் புத்தாண்டு அன்று அறுசுவைகளும் இடம் பெற்றிருக்கும் உணவை சமைத்து படையலிட வேண்டும்.
இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறு சுவைகளும் இருக்கும் உணவுகளை சமைப்பது சிறப்பு. பொதுவாக நல்ல நாட்களில் பாகற்காய் சேர்ப்பது இல்லை.
ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று அத்தனை வகையான சுவைகளும் இடம் பெற்ற படையலை படைப்பது விசேஷம்.
குறிப்பாக மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மெதுவடை போன்றன இடம் பெறுதல் அவசியம். விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாகும்.
இவை அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை அறிவுறுத்தவே இவ்வாறு அறுசுவை உணவினை புத்தாண்டின் தொடக்கத்தில் படைக்கப்படுகிறது.
