Oct 12, 2026 - 10:14 AM

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான 71 வயதான திருத்தந்தை லியோவுக்கு நுரையீரலில் சிறிய அளவிலான கட்டியொன்று (Lung nodule) கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்றுவதற்காக இந்த வாரத்தில் அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற திருத்தந்தை லியோவின் பதவிக் காலத்தில், அவருக்கு ஏற்படும் முதலாவது சுகாதாரப் பின்னடைவு இதுவாகும்.
செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த பக்தர்கள் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை ஆசீர்வாத உரையாற்றும்போது திருத்தந்தையே இந்தச் செய்தியை நேரடியாகப் பகிர்ந்து கொண்டார்.
"சமீபத்திய மருத்துவப் பரிசோதனையின் போது நுரையீரலில் ஒரு சிறிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது மிகவும் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டு, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அதனை அகற்றுவதற்கு முடிவு செய்துள்ளேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறுவை சிகிச்சை ரோமில் உள்ள 'அகோஸ்டினோ கெமெல்லி' (Agostino Gemelli) மருத்துவமனையில் நடைபெறவுள்ளதுடன், அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் மீண்டு வருவதற்கு சுமார் ஒரு வாரம் காலம் செல்லக்கூடும் என வத்திக்கான் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விளையாட்டுகளில் அதிக ஆர்வமுடைய 71 வயதான திருத்தந்தை லியோ, புகைபிடிக்கும் பழக்கமற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். எதிர்வரும் நவம்பர் மாதம் 6 முதல் 17 ஆம் திகதி வரை உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்கு அவர் 11 நாட்கள் கொண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


































