Oct 13, 2026 - 09:24 AM

தமிழக மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தோல்வி பின்னணியில் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். இதனிடையே, 15 எம்எல்ஏக்கள் த.வெ.க.வுக்கு வருவார்கள் என்ற செங்கோட்டையனின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தனியாக ஆலோசனை நடத்தினர். இது எடப்பாடி பழனிசாமிக்கு உள்கட்சியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் 15 பேர் அதிமுகவில் இருந்து த.வெ.க.வுக்கு வருவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
இடைத்தேர்தல் தோல்விக்கு பின் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் 15 பேர் அதிமுகவில் இருந்து த.வெ.க.வுக்கு வருவார்கள்.
நல்ல வேளை பழனிசாமி என்னை நீக்கினார், அங்கு இருந்து வந்ததால் மக்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதிமுகவில் இருந்து என்னை நீக்கினார், தற்போது நான் எங்கு இருக்கிறேன் என்று பார்க்க வேண்டும்.
யானை தேய்ந்து கட்டெறும்பாக போன கதையான அதிமுக நிலை உள்ளது. தேர்தலில் நான் வருவேன், நீ வருவாய் என்று பேசியவர்கள் இரண்டாம், மூன்றாம் இடத்துக்கு சென்று விட்டனர்.
தற்போது தேர்தல் களத்தில் கூட பலரால் நிற்க முடியவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் முதலமைச்சர் விஜய்யை போல் ஒருவரை நான் பார்க்கவில்லை என்று கூறினார்.
இந்த நிகழ்வுகள் மற்றும் செங்கோட்டையனின் பேட்டியானது, வரவிருக்கும் காலங்களில் அ.தி.மு.க-வில் பெரிய அளவிலான அரசியல் மாற்றங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.






























