Oct 14, 2026 - 04:26 PM

கடந்த 2014 ஆம் ஆண்டு, ஜெசிகாவுக்கு 16 வயதாக இருந்தபோது நேரிட்ட ஒரு கொடூர கார் விபத்து, அவரது இடுப்புக்குக் கீழே உள்ளப் பகுதியைச் செயலிழக்கச் செய்தது.
ஒரே நாளில் அவரது உலகம் தலைகீழாக மாறியது. சக்கர நாற்காலியே அவரது வாழ்க்கையாக மாறியது.
இருப்பினும், தனது ஊனத்தைக் கண்டு முடங்கிவிடாத ஜெசிகா, சமூக ஊடகங்களில் ஒரு Influencer ஆக மாறினார். சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ஒருவரின் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் சவால்கள் குறித்த வீடியோக்களைப் பகிர்ந்து, டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை ஈர்த்து சாதனை படைத்தார்.
மேலும், தனது பாரம்பரிய லெபனான் குடும்ப ஃபார்முலாக்களைக் கொண்டு 'தவில் பியூட்டி' என்ற கூந்தல் வளர்ச்சி பிராண்ட் ஒன்றையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
தன்னால் இனி சொந்தக் காலில் நிற்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த ஜெசிகாவின் வாழ்க்கையில், நவீன வைத்தியத் தொழில்நுட்பம் ஒரு பெரும் ஒளியை ஏற்றியுள்ளது.
உடலின் வெளிப்புறத்தில் அணியக்கூடிய அதிநவீன 'ரோபோட்டிக் எக்சோஸ்கெலிட்டன்' சாதனத்தின் உதவியுடன், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் முதன்முறையாக எழுந்து நின்று, தனது கால்களை எடுத்து வைத்து நடந்துள்ளார்.
அந்த ரோபோட்டிக் சூட்டைத் தனது உடலில் பொருத்திக்கொண்டு அவர் எழுந்து நின்றபோது, அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் அவர் வெளிப்படுத்திய உண்மையான உணர்ச்சிகள் பலரையும் உருக வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் பரவி வருகிறது.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள், "இதுபோன்ற ரோபோட்டிக் தொழில்நுட்பங்கள் தான் இந்த உலகிற்குத் தேவை", "தொழில்நுட்பம் இவ்வளவு தூரம் வளர்ந்திருப்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன், எதிர்காலத்தில் நீங்கள் எந்த ஒரு கருவியும் இல்லாமல் சொந்தக் காலில் நடக்கப் பிரார்த்திக்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் தங்களது வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.
































