Oct 15, 2026 - 08:13 AM

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் படங்களால் ஏற்படும் கடுமையான போட்டி மற்றும் அதிக கடன் சுமை காரணமாக, உலகின் முன்னணி புகைப்பட மற்றும் காட்சி உள்ளடக்க விநியோகஸ்தரான Getty Images நிறுவனம் தனது வங்குரோத்து (Chapter 11) நிலையை அறிவித்து, மீண்டும் ஒரு தனியார் நிறுவனமாக மாறத் தீர்மானித்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் மறுசீரமைப்பு ஒப்பந்தத்திற்குப் பின்னர் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
போட்டி நிறுவனமான Shutterstock உடன் மேற்கொள்ளப்படவிருந்த இணைப்பு முயற்சி முறிந்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனம் இந்தத் தீவிர முடிவுக்கு வந்துள்ளது.
மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர், Getty குடும்ப நிறுவனங்கள் மற்றும் Koch Equity Development நிறுவனம் ஆகியவை இதன் 100% உரிமையையும் கையகப்படுத்தும். இந்த முதலீட்டாளர்கள் புதிய பங்களுக்காக 533 மில்லியன் டொலர்களை வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கடன் சுமையைக் குறைத்தல்: பிணையற்ற பத்திர உரிமையாளர்கள் (unsecured bondholders) 270 மில்லியன் டொலர்களைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டுள்ளதுடன், பிணையுறுதி பெற்ற நிதி நிறுவனங்கள் வட்டிச் செலவுகளைக் குறைத்து, கடனைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளன.
செயல்பாடுகள்: இந்த வங்குரோத்து நிலை அறிவிப்பின் கீழும் நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும், விநியோகஸ்தர்களுக்கு வழக்கம்போல் பணம் செலுத்தப்படும் என்றும் நிறுவனம் உறுதிளிக்கிறது.
நிறுவனத்தின் நிதி அறிக்கைகளின்படி, ஜூன் 30 நிலவரப்படி அதன் மொத்தக் கடன் தொகை சுமார் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. 2022 ஆம் ஆண்டில் விசேட தேவை கையகப்படுத்தல் நிறுவனம் (SPAC) மூலம் 4.8 பில்லியன் டொலர் மதிப்பில் மீண்டும் பங்குச்சந்தையில் பிரவேசித்த நாளிலிருந்து, Getty நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு சுமார் 99% வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் காரணமாக, செப்டம்பர் மாத இறுதியில் நியூயோர்க் பங்குச் சந்தை (NYSE) நிறுவனத்தைப் பட்டியலிலிருந்து நீக்கும் (delisting) நடவடிக்கைகளையும் தொடங்கியது.
இருப்பினும், Koch Equity Development நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் 143 மில்லியன் டொலர் நிதியுதவி இந்த மறுசீரமைப்புச் செயல்முறைக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
































