Oct 18, 2026 - 05:28 PM
By முல்லைத்தீவு நிருபர் தவசீலன்
By முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் உள்ளிட்ட மல்லாவியின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், இதனை கட்டுப்படுத்தத் தவறின் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணிஞ்சியன்குளம் பகுதியில் மாலை வேளைகளில் வருகின்ற காட்டு யானைகள், மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்குச் சென்றுவருகின்ற மாணவர்கள், வேலைகளுக்குச் சென்றுவருகின்ற மக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் மிகுந்த அச்சுறுத்தலாகக் காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் முச்சக்கர வண்டி ஒன்றைத் தாக்கிய சம்பவம், மோட்டார் சைக்கிள் ஒன்றைத் தாக்கிய சம்பவம் மற்றும் பலரைத் துரத்திய சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்ற நிலையில், உயிராபத்துக்களை ஏற்படுத்துவதற்கு முன்னர் குறித்த யானைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அணிஞ்சியன்குளம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் பல கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டபோதும், இதுவரை காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக, அண்மையில் யோகபுரம் பகுதிக்குள் சென்ற யானைகள் வீடு ஒன்றின் கதவை உடைத்த காட்சிகள் பதிவாகியிருந்ததோடு, குறித்த பகுதிக்கு தாம் அங்கு குடியேறிய சுமார் 60 ஆண்டுகளாக யானைகள் எதுவுமே வருவதில்லை எனவும், தற்போது யானைகள் இவ்வாறு வருவதாகவும் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் குறித்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அணிஞ்சியன்குளம் உள்ளிட்ட மல்லாவி பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
































