Oct 18, 2026 - 09:35 PM

'அக்போ யானையைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கைகள் குறித்துத் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகச் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
யானையைக் கண்டறிவதற்காக இன்றைய தினத்தில் (18) இராணுவத்தினரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அந்த அமைச்சு குறிப்பிட்டது.
அத்துடன் நாளைய தினமும் (19) இத்தேடுதல் நடவடிக்கைகள் தொடரவுள்ளன.
மேஜர் ஜெனரல் கமிந்த சில்வா, பிரிகேடியர் பஸ்நாயக்க மற்றும் மேஜர் சில்வா உட்பட 21 ஆவது காலாட்படைப் பிரிவின் சிப்பாய்கள் இன்றைய தினம் யானையைத் தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது அக்போ யானையின் தோற்றத்தை ஒத்த ஒரு யானையும் யானைக்கூட்டம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளன.
அந்த விலங்குகளுக்கு மத்தியில் அக்போ யானை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இராணுவத்தினரும் அந்த யானைக்கூட்டத்தை நோக்கிச் சென்றபோது, தந்த யானை உட்பட அந்த யானைக்கூட்டம் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதைத் தவிர, மற்றொரு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது தோடமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அக்போ யானையைக் கண்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் அக்போ யானை தனது குடிசையின் அருகில் இருந்து நாச்சாதூவை நோக்கிச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை அடிப்படையாகக் கொண்டு அக்போ யானையைத் தேடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
































