Oct 18, 2026 - 09:02 PM

ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 50 நபர்களும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 5 நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, நயாரூ, துடுவ, கதிரவெளி, மார்பிள் பீச், இரக்கண்டி, புதுமாத்தளன், யாழ்ப்பாணம் சுண்டிக்குளம், கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, கோவிலன், புத்தளம், கல்லாறு உள்ளிட்ட கடல் மற்றும் கரையோர பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே, இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது 33 டிங்கி படகுகளையும் ஒரு தோணியையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகத் திருகோணமலை, முல்லைத்தீவு, மூதூர், குச்சவெளி, வாகரை, கொட்பே, யாழ்ப்பாணம், மயிலாட்டி மற்றும் புத்தளம் ஆகிய கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், கடற்படையினர் கடந்த 13 ஆம் திகதி தெற்கு கடற்பரப்பில் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் மூலம், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 5 நபர்களுடன் பலநாள் மீன்பிடிப் படகொன்றையும் கைப்பற்றி, மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் ஒப்படைத்தனர்.
































