Oct 19, 2026 - 04:59 PM

காவன்திஸ்ஸ யானையின் இறப்பிற்குப் பொறுப்பானவர்களுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக உயிரைத் தியாகம் செய்தாவது செயற்படுவதாக குருணாகல் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சட்டத்தரணி சதுர குணரத்ன தெரிவித்துள்ளார்.
காவன்திஸ்ஸ யானை உயிரிழந்த தினத்தன்று அவர் இதனைப் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
மேற்கோள்....
"உங்களுக்கு இழைக்கப்பட்ட குற்றத்திற்குப் பொறுப்பான அனைவரும் கண்டிப்பாக அவர்கள் செய்த தவறுக்குத் தண்டனை பெறவே வேண்டும்.
மரங்களை வெட்டுபவர்கள், உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள், நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள், ஹக்கபட்டஸ் வைப்பவர்கள் அனைவரையும் உங்களின் பெயரால் கைது செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
உங்களுக்காக, உங்களது இனத்திற்கு இந்த மண்ணில் உள்ள உரிமையை உறுதிப்படுத்த உயிரைத் தியாகம் செய்தாவது செயற்படுவேன். இது தனியாக செய்யக்கூடிய ஒன்றல்ல.
ஒரு மாத காலத்திற்குத் தொடர்ச்சியாக 10 விசேட அதிரடிப்படை அதிகாரிகளை எனது பணியாளர்களுடன் ஈடுபடுத்தினால், கல்கமுவ, மீகலாவ பகுதிகளில் மீண்டும் யானைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஒருவரைக் கூட விடமாட்டேன்.
விசேட அதிரடிப்படையின் உதவியை எனது விருப்பத்தின் பேரில் மட்டும் பெற்றுக்கொள்ள முடியாது. கஹல்ல பல்லேகலை சரணாலயத்தின் நிலங்களை மீளப் பெறச் சென்றபோது, எனது வேண்டுகோளுக்கிணங்க விசேட அதிரடிப்படை அதிகாரிகளை இணைத்துக்கொண்ட போது, இரண்டு நாட்கள் முடிவதற்குள் அவர்கள் உடனடியாகத் திரும்ப அழைக்கப்பட்ட விதம் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
எனவே, இன்றோ நாளையோ உங்களது யானை இனத்தின் பாதுகாப்புக்காக என்னால் இந்த நடவடிக்கையைச் செயல்படுத்த முடியாவிட்டாலும், காவன்திஸ்ஸ யானை அரசனே, உங்களுக்காக அந்தப் பணியை என்னால் முடிந்த முதல் சந்தர்ப்பத்திலேயே செய்து, உங்களது இனத்தின் எதிர்கால இருப்பை உறுதிசெய்வேன் என உறுதியளிக்கிறேன்."
மேற்கோள் நிறைவு....
அதன்படி, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சட்டத்தரணி சதுர குணரத்னவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மேல் மாகாண அதிகாரி வசந்த குணவர்தனவின் வழிநடத்தலில் இயங்கும் குழுவினர் நேற்று (18) விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.
இதற்காக வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வழிகாட்டலில் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றும் இணைந்துகொண்டது.
அதற்கமைய, வனவிலங்கு அதிகாரிகளும் வலான ஊழல் தடுப்புப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, காவன்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் எஹட்டுவெவ, ஹுனுகல்லேவ கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் எஹட்டுவெவ பிரதேச செயலகத்தில் திறன் அபிவிருத்தி அதிகாரியாகப் பணியாற்றும் 56 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து "போர் 12" ரகத் துப்பாக்கி, "கேப் துப்பாக்கி" ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கி மற்றும் 24 தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுமார் 4 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் அப்பகுதியில் சுற்றித்திரிந்த 'டயானா' என்ற பெண் யானை உயிரிழந்த சம்பவத்திற்கும், அதனைத் தொடர்ந்து காவன்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கும் இவரே காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று (19) மஹவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
காவன்திஸ்ஸ யானையின் இறப்புத் தொடர்பில் வனவிலங்கு திணைக்களம், வலான ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
































