Oct 19, 2026 - 05:25 PM

நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்க இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், இன்று (19) திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு முக்கிய நபர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் மேடைப் பேச்சுகளும், அவரது ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகளும் தமிழ் சினிமாவில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன. 'அடுத்த அரசியல் புயல் தனுஷா?' என்ற கேள்விகள் கோலிவுட் வட்டாரத்தில் தீவிரமாக எழுந்துள்ளன. சமீபத்தில் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தினர் தங்கள் நற்பணி இயக்கத்திற்காக அறிமுகப்படுத்திய சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடி, ஒரு புதிய அரசியல் கட்சியின் கொடியைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது. இதுவே அவரது அரசியல் வருகை குறித்த பேச்சுகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டது.
இருப்பினும், "இந்தக் கொடி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், திருவள்ளூர் நலத்திட்ட உதவி விழாவில் பேசிய தனுஷ், தன்னுடைய ரசிகர்களின் ஒற்றுமைக்கு பின்னால் ஒரு பெரிய சக்தி இருக்கிறது என்றும் அந்தச் சக்திக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்க வேண்டும் எனவும் கூறினார்.
தான் 10 ஆம் வகுப்பு வரை பயின்ற சென்னை சாலிகிராமத்தில் உள்ள 'தாய் சத்யா' பாடசாலைக்கு 3 தளங்கள் கொண்ட அதிநவீன புதிய கட்டடத்தை சொந்தச் செலவில் கட்டிக் கொடுத்தார். அண்மையில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, “அரசியலுக்கு வருவது தனுஷின் தனிப்பட்ட முடிவு. தனுஷ் கட்சி ஆரம்பித்தால் ஆரம்பித்து விட்டு போகட்டும் இல்லை என்றால் இருக்கட்டும்" என தெரிவித்தார்.
இதனிடையே புதிய அரசியல் கட்சியின் பெயரை தனுஷின் சார்பில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அண்மையில் தனது ரசிகர் மன்றங்களுக்கு மாவட்ட ரீதியாக நிர்வாகிகளை நியமித்து தனுஷ் உத்தரவிட்ட நிலையில், அரசியல் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் அதன்படி கட்சிக்கு 'தமிழக எழுச்சிக் கழகம்' என்று தனுஷ் பெயர் சூட்டியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பாக அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நடிகர் தனுஷ் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் முக்கிய பிரமுகர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சி பதிவு செய்தததாக கூறப்படும் நிலையில், தனுஷின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
































