Oct 24, 2026 - 11:03 PM

இலங்கையின் கடற்றொழில் தொழிற்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்துடன் (JICA) விசேட ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்குநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்டமாக, கடற்றொழில் தொழிற்துறையின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான 'அறுவடைக்குப் பிந்தைய இழப்பு' தொடர்பான தேவைகள் மதிப்பீடு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.
அந்த தேவைகள் மதிப்பீட்டின் முடிவுகளின் அடிப்படையில், மீன்பிடி தொழிற்துறையில் "அறுவடைக்குப் பிந்தைய மற்றும் குளிர் விநியோகத் தொடர் வளர்ச்சி" தொடர்பில் திட்ட முன்மொழிவு ஒன்றை தயாரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்திட்ட முன்மொழிவு தொடர்பில் மேலதிக சாத்தியக்கூறு ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக அண்மையில் (22) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, உரிய தரவு சேகரிப்பு சாத்தியக்கூறு ஆய்வானது எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டை சுற்றியுள்ள கடலோர மற்றும் ஆழ்கடல் மீன்பிடி மண்டலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படும்.
இந்த ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வின் மூலம், கடலோர மற்றும் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளின் போது மீன் வளம் வீண்விரயமாதல் மற்றும் அதற்கான காரணங்கள் துல்லியமாக மதிப்பிடப்படும். குறித்த சாத்தியக்கூறு ஆய்வு வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர், பெறப்படும் தரவுகள், இறுதி அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், வரையறுக்கப்பட்ட விளைச்சல் இருந்து அதிக மதிப்பைப் பெறுவதற்குரிய பிரதான திட்டம் உத்தியோகபூர்வமாகச் செயல்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் ஜப்பானின் நவீன தொழில்நுட்ப முறைகளை நாட்டின் கடற்றொழில் தொழிற்துறைக்கு அறிமுகப்படுத்தும் எதிர்காலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு எதிர்பார்க்கிறது.
































