Oct 25, 2026 - 10:35 PM

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விடுதலை வழங்குமாறு கோரி கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற சத்தியாக்கிரகம் இன்று (25) மாலை தற்காலிகமாக நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் அகற்றப்பட்டுள்ளன.
10 நாட்களாக கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்ற இந்த சத்யாகிரகம், முன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எழுத்துமூலமாக விடுத்த அறிவுறுத்தலுக்கமையவே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது.
கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவியுடையை நீக்குவதற்கு எதிராகவும், அவரை விடுதலை செய்வதை வலியுறுத்தியும் மகா சங்கத்தினரின் முன்னிலையில் எதிர்ப்புப் பேரணியொன்று கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி கண்டி தலதா மாளிகை வளாகத்தில் ஆரம்பமானது.
இதற்கமைய, பேரணியாக வருகை தந்த பிக்குகள் கடந்த 16 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தனர்.
அதன் பின்னர் ஜனாதிபதி செயலகம் முன் மறுநாள் வரை தங்கியிருந்த அவர்கள், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அங்கிருந்து சென்று புத்தசாசன அமைச்சுக்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
அங்கு அமைச்சின் செயலாளருடன் நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததாகக் கூறி, பிக்குகள் விகாரமஹாதேவி பூங்காவை நோக்கிச் செல்லத் தீர்மானித்தனர்.
பின்னர் அங்கு சத்யாகிரகப் போராட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய, இன்றுவரை 10 நாட்களாக சத்தியாக்கிரகம் குறித்த பூங்கா வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
































