Oct 26, 2026 - 01:07 PM

வழக்கமான ஒரு துறைமுக விஜயத்திற்காக, இன்று (26) கொழும்புத் துறைமுகத்திற்கு மீண்டும் வருகை தந்த சுயாதீன திரிபுருவ லிட்டோரல் வகை போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கன்பெராவிற்கு (LCS 30) வழங்கப்பட்ட மிக அன்பான வரவேற்பினை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பாராட்டுகிறது.
ஜூன் மாதத்தில் மேற்கொண்ட துறைமுக விஜயத்தினைத் தொடர்ந்து, இவ்வருடத்தில் இக்கப்பல் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயத்தினை இது குறிப்பதுடன், அமெரிக்க மற்றும் இலங்கைக் கடற்படைகளுக்கிடையிலான நீண்டகால பங்காண்மையினையும், இந்தோ - பசிபிக் பிராந்தியம் முழுவதும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் இருகடற்படைகளுக்குமிருக்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டினையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
“இவ்விஜயங்களை சீராகவும், வினைத்திறனுடனும் மேற்கொள்வதற்கு உதவியாக அமையும் இலங்கைக் கடற்படையின் தொழில்வாண்மைத்துவத்தினையும், ஆதரவினையும் நாங்கள் பாராட்டுகிறோம். ஒவ்வொரு விஜயமும், நம்பிக்கை, மற்றும் இந்து சமுத்திரம் முழுவதும் பாதுகாப்பினையும், ஸ்திரத்தன்மையினையும் பேணுவதற்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாடு
ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள எமது கடற்படை பங்காண்மையின் வலிமையினை மீளவலியுறுத்துகிறது.” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார்.
யுஎஸ்எஸ் கன்பெரா பற்றி: அலபாமா மாநிலத்தின், மொபைல் நகரில் கட்டப்பட்ட யுஎஸ்எஸ் கன்பெரா (LCS 30), வேகம், நெகிழ்வுத்தன்மை மற்றும் கரைக்கு அருகிலுள்ள கடற்பிராந்தியங்களிலும், ஆழ் கடலிலும் செயற்படுதல் ஆகிய திறன்களுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு சுயாதீன திரிபுருவ லிட்டோரல் வகை போர்க்கப்பலாகும். மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தகவமைத்துக் கொள்ளக்கூடிய செயற்பணிக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ள இக்கப்பலானது, கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள், கடல் கண்ணிவெடிகளை எதிர்கொள்ளல், மற்றும் அமெரிக்க கடற்படையின் பிரசன்னம் மற்றும் தடுப்புப் பணிகள் ஆகியவற்றிற்கு உதவி செய்யக்கூடியதாகும். முக்கிய கடல்வழித் தடங்களைப் பாதுகாப்பதற்கும், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பேணுவதற்கும், கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பிராந்தியப் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் அமெரிக்க கடற்படை கொண்டுள்ள உறுதிப்பாட்டினை, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது, 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற சாவோ தீவுப் போரின்போது அமெரிக்கப் படைகளுடன் இணைந்து போரிட்டபோது அவுஸ்திரேலியா இழந்த போர்க்கப்பலான எச்எம்ஏஎஸ் கன்பெராவினை கௌரவிக்கும் வகையில், யுஎஸ்எஸ் கன்பெரா (LCS 30) பெயரிடப்படுவதாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
இப்பெயரினைத் தாங்கும் இரண்டாவது அமெரிக்கக் கப்பலான கன்பெரா, 2023 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 22 ஆம் திகதி சிட்னியிலுள்ள ரோயல் அவுஸ்திரேலிய கடற்படையின் கப்பற்படைத்தளம் கிழக்கில் இடம்பெற்ற ஒரு வைபவத்தின்போது, நேச நாடொன்றில் படைத்துறைப்பணிக்கு நியமிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் முதலாவது போர்க்கப்பலெனும் வரலாற்றினைப் படைத்தது. அமெரிக்கர்களும் அவுஸ்திரேலியர்களும் இணைந்து ஆற்றிய சேவைகளதும், செய்த தியாகங்களதும் பாரம்பரியத்தினை அதன் பெயர்
தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.
































