Oct 27, 2026 - 11:45 AM
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்

காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீரேந்தும் பகுதிகளில் நேற்று (26) பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக, குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய கென்யோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும், லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அதேவேளை, விமல சுரேந்திர நீர்த்தேக்கம் நேற்று (26) முதல் தொடர்ந்து வான்பாய்ந்து வருகின்றது.
தொடர்ந்து பெய்துவரும் மழையினால் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வான்பாயும் மட்டத்தை மிகவும் அண்மித்துள்ளதாகவும் குறித்த பொறியியலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
































