Oct 27, 2026 - 11:58 AM
By யாழ். நிருபர் பிரதீபன்
By யாழ். நிருபர் பிரதீபன்

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் இன்று (27) காலை 8.30 மணிக்கு மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சேவைகளை ஆரம்பித்து வைத்தனர்.
சுமார் 134 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு, நீண்டகாலமாகப் பயன்பாடின்றிக் காணப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்தைச் செயல்படுத்துவதற்குப் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அவை வெற்றியளிக்கவில்லை.
பேருந்து நிலையத்தைச் செயல்படுத்துவது தொடர்பில் வட இலங்கை தனியார் பேருந்து சங்கத்தால் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்றத்தின் பணிப்புக்கு அமைவாக இணைந்த நேர அட்டவணையின் கீழ் பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொறுப்பின் கீழ் இந்த இணைந்த சேவை முன்னெடுக்கப்படும் நிலையில், இதுவரை இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் இச்சேவையில் இணைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நெடுந்தூரப் பேருந்து நிலையம் நான்காவது தடவையாக மீண்டும் சேவைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இம்முயற்சியாவது தொடர்ச்சியாகச் செயற்பட்டு, பொதுமக்களுக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட போக்குவரத்து வசதியை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
































