Oct 30, 2026 - 01:50 PM

பிரிட்டிஷ் கௌன்சில் (British Council), HSBC இலங்கையுடன் இணைந்து ‘Youth Connect: உள்ளடங்கல்மிகு பொருளாதார வலுவூட்டல் (IEE) – பசுமைப் பாதைகள்’ (Green Pathways) எனும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இலங்கையில் வளர்ந்து வரும் நீல-பசுமைப் பொருளாதாரத்தில் (blue-green economy) இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
'செவந்த' நகர வள மையம் (SEVANTHA Urban Resource Centre) மற்றும் 'முஸ்லிம் எய்ட் இலங்கை' (Muslim Aid Sri Lanka) ஆகிய அமைப்புகளால் நடைமுறைப்படுத்தப்படும் இச்செயல்திட்டம், உள்ளடங்கல்மிகு மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதேவேளை, இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுக்கான பாதைகளைக் கண்டறிய ஆதரவளிக்கும்.
இந்நிகழ்வில் பிரிட்டிஷ் கௌன்சில் மற்றும் HSBC இலங்கை ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான பங்களிப்பைக் கொண்டாடும் வகையிலான அடையாளப்பூர்வ தொடக்க நிகழ்வும் இடம்பெற்றது. இத்தொடக்கத்தைக் குறிக்கும் வகையிலும், இலங்கையின் வளர்ந்து வரும் நீல-பசுமைப் பொருளாதாரத்திற்குள் இளைஞர்கள் வாய்ப்புகளை அணுகுவதற்கு உதவுவதென்ற தங்களது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை மீளுறுதிப்படுத்தும் வகையிலும் இரு அமைப்புகளினதும் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நினைவு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பிரிட்டிஷ் கௌன்சில் இலங்கைக்கான பணிப்பாளர் (Country Director) கிளேயர் சியர்ஸ் (Clare Sears) கருத்துத் தெரிவிக்கையில்: "இலங்கையின் இளைஞர்கள் நாட்டின் நீல-பசுமை எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான திறமை, லட்சியம் மற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளனர். HSBC உடனான இந்த கூட்டுறவின் மூலம், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான திறன்கள், தன்னம்பிக்கை மற்றும் தொடர்புகளைக் கட்டியெழுப்புவதன் மூலம், அந்த ஆற்றலை வாய்ப்புகளாக மாற்ற நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம். அரசாங்கம், கல்வியாளர்கள், தனியார் துறை, அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் சமூகங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து இளைஞர்களை மையமாகக் கொண்டு செயற்படும்போதே நிலைபேறான மற்றும் அர்த்தமுள்ள மாற்றம் சாத்தியமாகும்." என்றார்.
HSBC இலங்கையின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) மார்க் சர்ஜனர் (Mark Surgenor) தெரிவிக்கையில்: "பொருளாதாரங்களும் பணியிடங்களும் மாற்றமடைந்து வரும் சூழலில், மக்கள் மாற்றங்களை எதிர்கொள்ளவும் எதிர்கால வாய்ப்புகளை அணுகவும் ஆதரவளிப்பது முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. 'பசுமைப் பாதைகள்' திட்டம் மூலம், இலங்கையின் நீல-பசுமைப் பொருளாதாரத்தை ஆராயும் இளைஞர்களுக்கு வழிகாட்டல் (mentoring), வணிக வழிகாட்டல் மற்றும் நிதிசார் திறன் மேம்பாடு உள்ளிட்ட நடைமுறை ஆதரவை வழங்குவதில் HSBC மகிழ்ச்சியடைகின்றது. பிரிட்டிஷ் கௌன்சில் மற்றும் எமது பங்காளர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம், இலங்கைக்கு மேலும் உள்ளடங்கல்மிகு மற்றும் மீள்தன்மையுடைய பொருளாதார எதிர்காலத்தை உருவாக்கப் பங்களிப்போம் என நம்புகிறோம்." என்றார்.
வரவிருக்கும் மாதங்களில், பங்கேற்பாளர்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுக்கான எங்களது தயார்நிலையை வலுப்படுத்துவதற்காகக் கற்றல் வாய்ப்புகள், வழிகாட்டல்கள், தொழில்துறை சார்ந்த ஈடுபாடுகள் மற்றும் நடைமுறை ஆதரவுகளைப் பெறுவர். குறிப்பாக இளம் பெண்கள், மாற்றுத்திறனாளி இளைஞர்கள் மற்றும் பொருளாதாரப் பங்கேற்பில் தடைகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு ஆதரவளிப்பதில் விசேட கவனம் செலுத்தப்படும்.
'பசுமைப் பாதைகள்' என்பது HSBC உடன் இணைந்து பிரிட்டிஷ் கௌன்சிலினால் முன்னெடுக்கப்படும் Youth Connect: உள்ளடங்கல்மிகு பொருளாதார வலுவூட்டல் திட்டத்தின் ஒரு அங்கமாகும். இத்திட்டம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகளை அணுகுவதற்கும், பொருளாதார வாழ்க்கையில் முழுமையாகப் பங்கேற்பதற்கும் தேவையான திறன்கள், அறிவு மற்றும் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்ப ஆதரவளிக்கிறது.
'Youth Connect: உள்ளடங்கல்மிகு பொருளாதார வலுவூட்டல் – பசுமைப் பாதைகள்' திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 2026 நவம்பர் 30 வரை திறக்கப்பட்டிருக்கும். விண்ணப்பங்கள் வரப்பெறும் முறைமைக்கு அமைவாகத் தொடர்ச்சியாகப் பரிசீலிக்கப்படும் என்பதால், முன்கூட்டியே விண்ணப்பிப்பது ஊக்குவிக்கப்படுகின்றது. இலங்கையின் நீல-பசுமைப் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள், விண்ணப்ப விவரங்கள் மற்றும் இத்திட்டம் தொடர்பான உடனுக்குடனான தகவல்களுக்கு பிரிட்டிஷ் கௌன்சில் இலங்கையின் ஃபேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கங்களைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
































