Nov 2, 2026 - 12:45 PM

இலங்கைக்கு எதிராக லாகூரில் கடந்த சனிக்கிழமை (31) நடைபெற்ற ஒருநாள் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பந்துகளை வீசி முடிக்காததால் பாகிஸ்தான் அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டி நேரத்தை கணக்கிட்ட பிறகு, பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஒரு ஓவர் குறைவாக வீசியிருப்பது கண்டறியப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின்(ICC) ஒழுக்கக் நெறிமுறைகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் வீசத் தவறும் ஒவ்வொரு ஓவருக்கும் வீரர்களின் போட்டிக் கட்டணத்திலிருந்து 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும்.
பாகிஸ்தான் அணியின் தலைவர் ஷஹீன் அஃப்ரிடி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ஏற்றுக்கொண்டதால், இது குறித்த முறைசார் விசாரணைகளின் தேவை தவிர்க்கப்பட்டது.
இந்தப் போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 326 ஓட்டங்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக துரத்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இது ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியொன்றில் எட்டப்பட்ட கூட்டு அதிகபட்ச இலக்காகும் (Joint highest chase) என்பது குறிப்பிடத்தக்கது.
































