Nov 2, 2026 - 04:59 PM

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுடன் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பணிநிறுத்தம் செய்யப்பட்டிருந்த சூரியகந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சுசந்த ஹெட்டியாரச்சி அவருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாதை மறிப்பு, குற்றவியல் அச்சுறுத்தல் மற்றும் குற்றவியல் துன்புறுத்தல் தொடர்பில் பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்கு இன்று (02) எம்பிலிப்பிட்டிய பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய பொலிஸார் தவறியமை குறித்து நீதிவான் வினவியபோது, சட்டப் பிரிவிடம் ஆலோசனை பெற வேண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கான்ஸ்டபிள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விஜித ஜி. புஞ்சிஹேவா, பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் நீதிமன்றில் விடயங்களை முன்வைத்தார்.
பொலிஸார் குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தவறியமையினால் கான்ஸ்டபிளை வழக்கிலிருந்து விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டதாக சட்டத்தரணி புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
சூரியகந்த பகுதியில் இடம்பெற்ற கஞ்சா சோதனையின் போது பாராளுமன்ற உறுப்பினருக்கும் கான்ஸ்டபிளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு தரப்பினரும் பரஸ்பரம் வழக்கு தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
































