Nov 4, 2026 - 12:07 PM

Capital Alliance Holdings PLC (CAL), தனது பூரண உரிமையாண்மையுடன், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட துணை நிறுவனமான CAL Global Pte. Ltd நிறுவனத்தின் மூலம், எல்லைப்புற பங்குச் சந்தைகளில் நிபுணத்துவம் பெற்ற, ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்ட நிதி முகாமைத்துவ நிறுவனமான Asia Frontier Capital Ltd. (AFC) நிறுவனத்தின் 51% பங்குகளைக் கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்மொழியப்பட்ட இந்தக் கையகப்படுத்தல், நிறைவடைவதற்கு முன்பு, ஹொங்கொங்கின் Securities and Futures Commission ஆணைக்குழுவின் அங்கீகாரம் அடங்கலாக, ஒழுங்குமுறை அங்கீகாரங்களைப் பொறுத்தே இது பூரணமாக்கப்படும்.
இந்த முன்மொழியப்பட்ட கையகப்படுத்தல், CAL நிறுவனத்தின் சர்வதேச விரிவாக்கத்தில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. இது பல சந்தைகளில் அதன் புவியியல் தடத்தை விரிவுபடுத்துவதோடு, எல்லைப்புற சந்தை முதலீட்டில் அதன் நிபுணத்துவத்தையும் வலுப்படுத்துகிறது. இது இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சிங்கப்பூரில் உள்ள CAL நிறுவனத்தின் செயல்பாடுகளை, ஹொங்கொங்கில் உள்ள AFC நிறுவனத்தின் சிறப்பாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள முதலீட்டுத் தளத்துடனும், வியட்நாம், உஸ்பெகிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ள களப்பணி அணிகளுடனும் இணைக்கும். இந்த விரிவாக்கப்பட்ட பிரசன்னம், உள்ளூர் சந்தை நுண்ணறிவை சர்வதேச முதலீட்டாளர் அணுகலுடன் இணைக்கும் குழுமத்தின் திறனை வலுப்படுத்தும்.
இந்தக் கூட்டாண்மையானது, எல்லைப்புற சந்தைகளுக்கு சர்வதேச மூலதனத்தை வழிநடத்துவதற்கான CAL நிறுவனத்தின் தளத்தை விரிவுபடுத்துவதோடு, அதன் தற்போதைய சந்தைகளுக்கு அப்பாற்பட்ட முதலீட்டு வாய்ப்புகளுக்கான அணுகலையும் விரிவாக்கும்.
முன்மொழியப்பட்ட கையகப்படுத்தல் குறித்து கருத்து தெரிவித்த CAL குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கனிஷ்க மனகர, “எல்லைப்புற சந்தைகள் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குகின்றன, இருப்பினும் சர்வதேச முதலீட்டாளர்கள் அவற்றை சென்றடைவது கடினமாக உள்ளது. இந்தக் கூட்டாண்மை அதை மாற்றுகிறது. இது எங்களை மேலும் மூன்று எல்லைப்புற சந்தைகளுக்கு இட்டுச் செல்கிறது, காலப்போக்கில் அங்கு ஆழமான பிரசன்னத்தை உருவாக்க எங்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது, மேலும் உலகின் மிக முக்கியமான நிதி மையங்களில் ஒன்றான ஹொங்கொங்கிற்கும் இட்டுச் செல்கிறது. AFC உடன் இணைந்து, சர்வதேச மூலதனம் எல்லைப்புற சந்தைகளை அணுகுவதற்கும், அதே முக்கியத்துவத்துடன், எங்கள் சந்தைகளில் உள்ள முதலீட்டாளர்கள் எல்லைப்புற சந்தைகள் மற்றும் அதற்கு அப்பால் உள்ள வாய்ப்புகளை அணுகுவதற்கும் நாங்கள் ஒரு பாலமாக செயல்படுவோம். தோமஸ் அவர்களும் அவரது அணியும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஒரு மரியாதைக்குரிய நிறுவனத்தை கட்டியெழுப்பியுள்ளனர், நாங்கள் ஒன்றாக இணைந்து அடுத்த அத்தியாயத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.”
2013ல் தோமஸ் ஹக்கரால் நிறுவப்பட்ட AFC, ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் உள்ள முதலீட்டாளர்களுக்காக 125 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிர்வகிக்கப்படும் சொத்துக்களை முகாமைத்துவம் செய்து வருகிறது. அதன் முதலீட்டு வரிசையில் பல நாடுகளை உள்ளடக்கிய AFC Asia Frontier Fund மற்றும் வியட்நாம், ஈராக் மற்றும் உஸ்பெகிஸ்தானில் முதலீடு செய்யும் பிரத்தியேக நிதிகள் அடங்கும். AFC, இலங்கை மற்றும் பங்களாதேஷ் பங்குகளில் நீண்டகால முதலீட்டாளராகவும் இருந்து வருகிறது. இதன் மூலம், இவ்விரு சந்தைகளிலும் ஒரு சிறந்த சாதனைப் பதிவை ஏற்படுத்தியுள்ளதுடன், உள்ளூர் முதலீட்டு சமூகத்தில் ஒரு முன்னோடியான மற்றும் ஆழ்ந்த பார்வை கொண்ட சர்வதேச முதலீட்டாளர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
இந்தக் கூட்டாண்மையை வரவேற்று, AFC நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான தோமஸ் ஹக்கர் கூறியதாவது, “எல்லைப்புற சந்தைகள் உள்ளூர் அறிவுக்கும் பொறுமைக்கும் வெகுமதி அளிக்கின்றன, மேலும் CAL நிறுவனத்திடம் இவை இரண்டும் உள்ளன. எங்கள் முதலீட்டாளர்கள், தங்கள் பணத்தை நிர்வகிப்பதற்கான அதே அணுகுமுறை, அதே அணி, முதலீட்டு செயல்முறை மற்றும் எங்கள் முடிவுகளில் உள்ள சுயாதீனம் ஆகியவற்றிலிருந்து தொடர்ந்து பயனடைவார்கள். எமக்குப் பின்னால் உள்ள தளத்தின் வலிமை மட்டுமே மாறுகிறது. தகவல்கள் குறைவாக உள்ள சந்தைகளில் ஆழமான ஆராய்ச்சி மற்றும் புள்ளிவிபரத் திறன்களையும், வளர்ந்துவரும் நிலையான வருமானத்தில் நீண்டகால நிபுணத்துவத்தையும், தெற்காசியா முழுவதிலும் உள்ள முதலீட்டாளர்களுடனான உறவுகளையும் CAL கொண்டுவருகிறது. பட்டியலிடப்பட்ட, நன்கு நிர்வகிக்கப்படும் ஒரு குழுமத்தின் ஆதரவு, நாங்கள் தொடர்ந்து வளரும்போது எங்கள் இணக்கம், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுத் தளத்தையும் பலப்படுத்துகிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக AFC நிறுவனத்தைக் கட்டியெழுப்பிய பிறகு, அடுத்த அத்தியாயத்திற்கு இதைவிடச் சிறந்த கூட்டாளரை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.”
2000ம் ஆண்டில் நிறுவப்பட்டு, கொழும்புப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள CAL, முதலீட்டு வங்கிச் சேவை, சொத்து மற்றும் செல்வ முகாமைத்துவம், நிலையான வருமானம், பங்குத் தரகு மற்றும் ஆராய்ச்சிச் சேவைகளை வழங்குகிறது. இது இலங்கை மற்றும் பங்களாதேஷ் முழுவதும் 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகிக்கிறது.
முன்மொழியப்பட்ட கையகப்படுத்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உரிய ஒழுங்குமுறைத் தேவைகளைப் பொறுத்து, முன்னணி நிலையான வருமானம் மற்றும் நாட்டுக்கேற்ற மூலோபாயங்கள் உள்ளிட்ட AFC நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்துவது குறித்து ஆராயவும் CAL மற்றும் AFC ஆகியன திட்டமிட்டுள்ளன.
































