Nov 6, 2026 - 07:05 PM

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இன்று (6) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு இந்த விசேட போக்குவரத்து சேவை தொடர்ச்சியாகச் செயற்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.
சாதாரண பஸ் சேவைகளுக்கு மேலதிகமாக, இன்றைய தினம் மாத்திரம் 70க்கும் மேற்பட்ட விசேட பஸ் சேவைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, வழக்கமான பஸ் அட்டவணைக்கு மேலதிகமாக இன்று 102 பஸ்களும், நாளை 74 பஸ்களும், ஞாயிற்றுக்கிழமை 46 பஸ்களும் விசேடமாகச் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
கடந்த காலங்களின் பயணிகள் போக்குவரத்துத் தரவுகள் மற்றும் கண்டி வீதியின் ரயில் சேவைத் தடங்கல்கள் என்பவற்றை கவனத்திற்கொண்டே இந்த மேலதிக பஸ் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
தீபாவளிப் பண்டிகைக்காக ஊர்களுக்கு சென்ற மக்கள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் கொழும்பு திரும்புவதற்கும் தேவையான போக்குவரத்து வசதிகள் பூரணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடைசிப் பயணி வரை போக்குவரத்து தேவையை நிறைவு செய்ய இலங்கை போக்குவரத்து சபை அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அதன் தலைவர் சஞ்சீவ கனகரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
































