Nov 12, 2026 - 07:32 PM
By மலையக நிருபர் சுந்தரலிங்கம்
By மலையக நிருபர் சுந்தரலிங்கம்

நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்து வருகிறது.
இதற்கமைய, தலவாக்கலை மற்றும் மேல் கொத்மலை நீரேந்தும் பிரதேசங்களில் பெய்துவரும் அதிக மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், குறித்த நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தொடர்ச்சியாகத் திறக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் மாலை வேளைகளில் கனமழை பெய்து வருவதால், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேலதிக வான் கதவுகளும் திறக்கப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, கொத்மலை நீர்த்தேக்கத்திற்குக்கீழ் அமைந்துள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தொடர் மழை காரணமாக காசல்ரீ, மவுசாக்கலை, கெனியன், லக்ஸபான, நவலக்ஸபான, பொல்பிட்டிய மற்றும் விமலசுரேந்திர உள்ளிட்ட ஏனைய பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால், குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் எந்த நேரத்திலும் திறக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே, நீர்த்தேக்கங்களை அண்மித்த ஆற்றுப் பகுதிகளிலும் தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், ஆறுகளின் நீர்மட்ட அதிகரிப்புத் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர் மழை மற்றும் நீர்த்தேக்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் மேலதிக நீர் காரணமாக ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைத் தவிர்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.
































