Nov 13, 2026 - 12:10 PM

மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையம், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் வீடு உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பல பாலிவுட் பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் 'ஜல்சா' பங்களா, மும்பை சர்வதேச விமான நிலையம், மேயர் அலுவலகம், பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை, மகாலட்சுமி பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அமிதாப் பச்சன் அவரது இல்லத்திலேயே கொல்லப்படுவார் என்று பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'காலிஸ்தான் நேஷனல் ஆர்மி' என்ற பெயரில் அனுப்பப்பட்ட இந்த மிரட்டல் மின்னஞ்சல் மூலம், பிரபல பாடகர் தில்ஜித் தோசாங்கின் நிகழ்ச்சிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொலிஸாருக்கும், வெடிகுண்டு நிபுணர்களும் மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக விரைந்து சென்று, மோப்ப நாய் மற்றும் அதிநவீன கருவிகள் உதவியுடன் சோதனைகளில் ஈடுபட்டனர்.
முதற்கட்ட சோதனைகளில் சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றும், இது ஒரு வதந்தியாக இருக்கக்கூடும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், மின்னஞ்சலை அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்தும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
































