Nov 20, 2026 - 01:18 PM

வீட்டுப் பாவனை சமையல் எரிவாயு விலை அதிகரிப்பினால் நுகர்வோருக்குப் பாதகமான பாதிப்புகள் ஏற்படாத வகையில் செயற்படுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு சுற்றாடல், விவசாயம் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு வலியுறுத்தியுள்ளது.
குறித்த குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் கடந்த 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வீட்டுப் பாவனை எரிவாயுவை விநியோகிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையைக் கணிசமான அளவு அதிகரித்துள்ளமை தொடர்பில் வினவுவதற்காக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகள் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், வீட்டுப் பாவனை எரிவாயு விலையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தமது அதிகாரசபைக்கு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், எரிவாயு விலை அதிகரிப்பினால் நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, குறித்த தனியார் நிறுவனத்துடன் கலந்துரையாடி விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தனியார் நிறுவனத்திற்குச் சந்தையில் உள்ள பங்கு குறைவாக இருப்பதால் அதிக விலைக்கு எரிவாயுவைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும், அதற்கமைய கொள்வனவுச் செலவிற்கு ஏற்ப எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை அதிகரிக்க வேண்டியிருந்ததாகவும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளதாகத் தலைவர் குழுவிற்கு அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் வீட்டுப் பாவனை எரிவாயு விநியோகத்திற்குத் தடைகள் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்துமாறும், விலை அதிகரிப்புகளால் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் செயற்படுமாறும் குழு இதன்போது வலியுறுத்தியுள்ளது.

































