Nov 21, 2026 - 06:42 AM

அரச நிர்மாணத்துறை பணிகளின் போது தனியார் நிறுவனங்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, தடைகளை நீக்கி நிர்மாணப் பணிகளை மேலும் துரிதப்படுத்தும் நோக்குடன் “Builders’ Gateway” நிர்மாணத்துறை வசதியளித்தல் பிரிவு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று (20) திறந்து வைக்கப்பட்டது.
இதற்கு இணையாக, https://nbfc.presidentsoffice.gov.lk/ இணையத்தளமும் திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய VIYASA தேசிய வணிக வசதியளித்தல் மையத்துடன் இணைந்ததாக இந்த நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு தமது பிரச்சினைகளை Builders Gateway நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் https://nbfc.presidentsoffice.gov.lk/ எனும் Builders Gateway இணையத்தளம் ஊடாகவோ அல்லது info.nbfc@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ முன்வைக்க முடியும்.
அத்துடன் 9411 267 2750 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ அல்லது 94 77 354 3495 என்ற இலக்கத்திற்கு வட்ஸ்அப் (WhatsApp) மூலமோ அனுப்பி வைக்க முடியும். அல்லது C80, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது குறித்த இடத்திற்கு நேரடியாக வருகை தந்தோ சமர்ப்பிக்க முடியும்.
இதன்போது கருத்துத் தெரிவித்த வீடமைப்பு, நிர்மாணிப்புத் துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க,
தனியார் நிறுவனங்களே அரசாங்கத்தின் நிர்மாணப் பணிகளை பெருமளவில் முன்னெடுக்கின்றன. இந்த வர்த்தக சமூகத்தினர் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்லும் போது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.
அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அவர்கள் பல்வேறு அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட பலரைச் சந்தித்துப் பிரச்சினைகளை முன்வைக்கின்றனர். உதவிகளைக் கோருகின்றனர். சில வேளைகளில் ஜனாதிபதியைக் கூட சந்தித்து பிரச்சினைகளை கூறுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் விரக்தியடைகின்றனர்.
இந்த நிலைமையை மாற்றி, நிர்மாணிப்புத் துறையை மேலும் செயற்திறனாக முன்னோக்கிக் கொண்டு செல்லும் நோக்குடனேயே ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்த நிறுவனம் நிறுவப்படுகிறது.
அதன்படி, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மூலதனச் செலவினங்களுக்காக 2000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும் பகுதி நிர்மாண வசதிகளுக்காகவே ஒதுக்கப்படுகிறது.
எனவே, அடுத்த வருடம் நிர்மாணத் துறையில் பாரிய எழுச்சி கொண்ட ஆண்டாக அமையும். விசேடமாக உட்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்பும் பணிகள் அடுத்த ஆண்டில் மேலும் துரிதமாக நடைபெறும். இதற்கு அதிக பங்களிப்பை வழங்கும் தனியார் நிர்மாணத் துறை நிறுவனங்கள் தமது பணிகளை மிகவும் இலகுவாகவும் துரிதமாகவும் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதே எமது நோக்கமாகும்.
இந்த “Builders’ Gateway” நிறுவனத்தை உருவாக்குவதன் ஊடாக பாரிய அளவிலான நிர்மாணங்கள் தொடக்கம் மிகச் சிறிய நிர்மாணங்கள் வரை அனைத்து நிர்மாணிப்புகளின் போதும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உரிய நிறுவனங்கள் சார்பாக தேவையான தலையீடுகளை இலவசமாகவே வழங்குவதற்கு இந்த நிறுவனம் வழிகளை மேற்கொள்ளும்.
உங்கள் தேவைக்கேற்ப பிரச்சினை, கோரிக்கை, ஆலோசனை அல்லது முறைப்பாடு என எந்தவொரு வடிவத்திலும் எமக்கு முன்வைக்க முடியும். அவை முன்வைக்கப்பட்டதன் பின்னர், உரிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மிகவும் இலகுவாக அப்பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பதே இதன் நோக்கமாகும். மாறாக, எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் அழுத்தம் கொடுப்பது இதன் மூலம் நடைபெறாது.
இங்குள்ள மிக முக்கியமான விடயம் என்னவெனில், இந்த “Builders’ Gateway” இன் அதிகாரிகள் குழாமிற்கு தனியார் நிறுவனங்களின் தேவைகள், அதன் பணிகளின் தன்மை போன்றவற்றைப் போலவே அரச நிறுவனங்களின் செயற்பாடுகள், அதன் சட்டதிட்டங்கள், அவை இயங்கும் விதம் அல்லது அரச பொறிமுறை தொடர்பாக மிகச் சிறந்த புரிதல் இருக்க வேண்டும் என்பதாகும். இந்த நிறுவனத்தின் சேவையையும் பெற்றுக்கொண்டு அடுத்த ஆண்டில் நிர்மாணத்துறையில் பாரிய மாற்றம் ஏற்படும் என நாம் நம்புகிறோம் என்றார்.
































