Nov 21, 2026 - 01:39 PM

இன்று (21) அனுஷ்டிக்கப்படும் உலக கடற்றொழில் தினத்தை முன்னிட்டு, இலங்கை உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள கடற்றொழிலாளர்கள், கடல் வளங்களைச் சார்ந்து வாழும் மக்கள் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் கௌரவத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
உலக கடற்றொழில் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"உலக உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, வேலைவாய்ப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதில் கடற்றொழில் துறை மிக முக்கியமான பங்களிப்பைச் செய்து வருகின்றது.
கடல் வளங்களைப் பாதுகாத்து, அவற்றை நிலையான முறையில் பயன்படுத்துவதன் ஊடாக எதிர்காலத் தலைமுறையினருக்கும் வளமான கடல் சூழலை உறுதிப்படுத்துவது எமது அனைவரதும் பொறுப்பாகும்.
இன்றைய உலகில் கடற்பொருளாதாரம் (நீலப் பொருளாதாரம்) மிக முக்கியமானதொரு பொருளாதாரத் துறையாக வளர்ச்சியடைந்து வருகின்றது. எமது நாட்டைச் சூழப் பரந்த கடல் வளம் காணப்படுகின்றது.
இந்த வளத்தை முறையாகவும் நிலையானதாகவும் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், கடற்றொழிலாளர்களின் வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதற்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
2026 ஆம் ஆண்டின் உலக கடற்றொழில் தினம், கடற்றொழில் மற்றும் நீர்வளர்ப்புத் துறையில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குதல், தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் கண்ணியமான தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.
இத்தகைய சர்வதேச நோக்கங்கள் எமது நாட்டின் கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவதற்கும், அதில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வழிகாட்டியாக அமைகின்றன.
கடற்றொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அவர்களின் தொழில் சவால்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதும், கடல் வளங்களைப் பாதுகாப்பதுடன் உற்பத்தித்திறனை அதிகரிப்பதும் எமது முக்கிய நோக்கங்களாகும்.
தொழில்நுட்பம், நவீன மீன்பிடி முறைகள், சந்தை வாய்ப்புகள், பெறுமதி சேர்க்கப்பட்ட கடலுணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறைகளில் புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாகக் கடற்றொழில் துறையை வலுப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
கடற்றொழிலாளர்கள், கடலுணவு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் கடல்சார் சேவையாளர்கள் எனக் கடற்பொருளாதாரத்தை நம்பி வாழும் ஒவ்வொருவரின் நலன்களையும் மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.
குறிப்பாக, பெண்கள் மற்றும் இளைஞர்கள் இந்தத் துறையில் அதிக வாய்ப்புகளைப் பெற்று, தன்னிறைவான பொருளாதார வாழ்க்கையை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்துவது அவசியமாகும்.
'வளமான நாடு – அழகான வாழ்க்கை' என்ற எமது உறுதிமொழி நிச்சயமாக நிறைவேற்றப்படும். அந்த இலக்கை அடைவதில் கடற்றொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாடு, அவர்களின் குடும்பங்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் கடற்பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆகியவை முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
கடற்றொழிலாளர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பையும், அவர்களின் வாழ்வுக்கு உரிய பாதுகாப்பையும், எதிர்காலத்திற்கு நம்பிக்கையையும் ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.
கடல் வளங்களைப் பாதுகாப்போம், கடற்றொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவோம், நிலையான கடற்பொருளாதாரத்தின் ஊடாக நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுப்போம்.
உலக கடற்றொழில் தினத்தில், கடற்றொழிலாளர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கௌரவித்து, அனைவருக்கும் வளமான, பாதுகாப்பான, மகிழ்ச்சியான எதிர்காலம் அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்."
































