Nov 23, 2026 - 09:32 AM

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் இரண்டாம் நாள் அமர்வு இன்று (23) நடைபெறுகின்றது.
இதற்கமைய, இன்றைய நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் பிரதி சபாநாயகர் தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய விவாதத்தில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய அமைச்சுக்களின் செலவினத் தலைப்புக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
2027 வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழு நிலை விவாதம் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு – செலவுத் திட்டமான 2027 நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்ட யோசனைகள், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர், கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதில் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
































