Nov 23, 2026 - 09:47 AM

இஸ்ரேலின் காபந்துப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசியல் போட்டியாளரான காடி ஐசன்கோட் ஆகியோரின் கட்சிகளுக்கு இடையிலான புதிய சுற்றுக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், எவ்வித இணக்கப்பாடுமின்றி நேற்று (22) நிறைவடைந்துள்ளன.
டெல் அவிவ் நகருக்கு அருகிலுள்ள ஹெர்ஸ்லியா (Herzliya) விடுதியொன்றில், ஐசன்கோட்டின் 'யஷார்' (Yashar) கட்சி மற்றும் நெதன்யாகுவின் 'லிக்குட்' (Likud) கட்சிப் பிரதிநிதிகளுக்கு இடையே சுமார் நான்கு மணித்தியாலங்கள் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பினரும் முக்கிய கொள்கை ரீதியான விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்ததாகவும், அடுத்தகட்டச் சந்திப்பு விரைவில் நடைபெறும் எனவும் இரு கட்சிகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அடுத்த சந்திப்புக்கான திகதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு தரப்புக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட்டிற்கு எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியைச் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ளும் வகையிலான தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நெதன்யாகு வலியுறுத்தி வருகின்றார்.
இதன் மூலம் தன்மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பைப் பெற முடியும் என அவர் எதிர்பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எனினும், நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கப் போவதில்லை என ஐசன்கோட் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதோடு, அவரது கூட்டணிக் கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் நப்தாலி பென்னட்டும் எவ்வித சூழ்நிலையிலும் நெதன்யாகுவுடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் இணைவதற்கு அரபுக் கட்சிகளைத் தவிர்க்க வேண்டும், பலஸ்தீன அரசை உருவாக்குவதை நிராகரிக்க வேண்டும் மற்றும் சிரியா, லெபனான், காசா பகுதிகளின் மீதான இஸ்ரேலியக் கட்டுப்பாட்டைத் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகளை நெதன்யாகுவின் லிக்குட் கட்சி முன்வைத்துள்ளது.
பேச்சுவார்த்தைகள் இழுபறிப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என எச்சரித்துள்ள ஐசன்கோட், பாராளுமன்றத்தில் 'அவசரகால தேசிய அரசாங்கம்' ஒன்றை முன்மொழியத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
































