Sep 30, 2024 - 12:02 PM -
0
“தெற்காசியாவின் சிறந்த இஸ்லாமிய வங்கி 2024” எனும் பெருமைக்குரிய கௌரவிப்பை அமானா வங்கி பெற்றுள்ளது. பிரான்ட்ஸ் ரிவியு சஞ்சிகை விருதுகள் 2024 நிகழ்வின் போது இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. பிராந்தியத்தில் காணப்படும் இதர வங்கிகளுடன் ஒப்பிடுகையில் அமானா வங்கியின் தலைமைத்துவ நிலை மேலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிராந்தியத்தில் வட்டிசாராத நிதிவசதிகளை ஊக்குவிப்பதில் வெற்றிகரமான கதையை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது.
இந்த கௌரவிப்பு தொடர்பில அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் குறிப்பிடுகையில், “கடந்த சில ஆண்டுகளாக உறுதியான பெறுபேறுகளை பதிவு செய்திருந்த நிலையில், “தெற்காசியாவின் சிறந்த இஸ்லாமிய வங்கி 2024” எனும் உயர் கௌரவிப்பைப் பெற்றுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். நிலைபேறான செயற்பாடுகளை பின்பற்றி, மக்களுக்கு நட்பான மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட வங்கியியல் வழிமுறைகளை ஊக்குவிப்பதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கு இது கௌரவம் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது. எமது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு அவர்களின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் நம்பிக்கைக்காக நாம் மிகவும் நன்றி தெரிவிக்கின்றோம். இலங்கையின் தலைமைத்துவ நிலையை மேலும் வெளிப்படுத்துவதுடன், பிராந்தியத்தில் இஸ்லாமிய வங்கிச் சேவைகளுக்காக மையமாக திகழ்வதற்கு காணப்படும் வாய்ப்பை வெளிப்படுத்துவதாகவும் இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது.” என்றார்.
சிறப்புக்கான அமானா வங்கியின் தொடர்ச்சியான செயற்பாடுகள் மற்றும் தமது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்ப்பது போன்றவற்றுக்கான அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு கிடைத்த கௌரவிப்பாக இது அமைந்துள்ளது. சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள் மற்றும் விற்பனையாளர் பிரிவுகளில் சிறந்த செயற்பாடுகளை வங்கி தொடர்ச்சியாக வெளிப்படுத்தி, நிதித் துறையின் அபிவிருத்திக்கு பெருமளவு பங்களிப்பை வழங்குகின்றது. டிஜிட்டல் வங்கியியல் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை கண்டறிதல் போன்றவற்றில் கவனம் செலுத்துவதுடன், புத்தாக்கமான மக்களுக்கு நட்பான மற்றும் அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் நிதிசார் தீர்வுகளுக்கு பிராந்தியத்தில் கீர்த்தி நாமமும் கிடைத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.