Oct 8, 2024 - 01:03 PM -
0
நவலோக மருத்துவமனை குழுமம் அக்ரஹார மருத்துவ காப்புறுதி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பல சலுகைகளை வழங்கும் நோக்கத்துடன் தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நோயாளிகளை மையமாகக் கொண்ட உயர்தர சுகாதார சேவையை வழங்குவதற்கான நவலோக மருத்துவமனை குழுமத்தின் அர்ப்பணிப்பு இதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
அண்மையில் நடைபெற்ற விழாவில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், நவலோக மருத்துவமனை குழுமத்தின் பணிப்பாளர்/பொது முகாமையாளர் பேராசிரியர் லால் சந்திரசேன மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கமனி என். லியனாராச்சி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும், தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் சாகல அபேவிக்ரம, உதவிப் பொது முகாமையாளர் - (செயல்பாடுகள்) சமில் துஷார, உதவிப் பொது முகாமையாளர் - (காப்புறுதி) நிமாலி பதிரண, உதவி முகாமையாளர் - (சட்டம்) பிரதிபா வெலிகன்ன மற்றும் பதில் உதவி பொது முகாமையாளர் - (நிதி) தம்மிக வீரகோன் ஆகியோர் கலந்து கொண்டனர். நவலோக மருத்துவமனை குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் ரசிகா திலகரத்ன மற்றும் உதவி முகாமையாளர் - நிறுவன உறவுகள் துலன கலப்பத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டாண்மை மூலம், காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் அக்ரஹார உறுப்பினர்கள் சிறப்பு சுகாதார பலன்களைப் பெறவும், நவலோக மருத்துவமனை குழுமத்தால் வழங்கப்படும் பல சுகாதார சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும். நவலோக மருத்துவமனை அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக நீண்டகால உறவை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயல்படுவதுடன், இது அந்த அர்ப்பணிப்பின் முக்கிய மைல்கல்லாக இதனைக் குறிப்பிட முடியும். குறிப்பாக, அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், குறைந்த விலையில் தரமான சுகாதார சேவையை அவர்களுக்கு வழங்குவதற்கும் நம்பகமான சுகாதார சேவை வழங்குநராக நவலோக மருத்துவமனை குழுமம் பெற்றுள்ள சிறப்பை இந்த ஒப்பந்தம் மேலும் உறுதிப்படுத்தும்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நவலோக மருத்துவமனை குழுமத்தின் பணிப்பாளர்/பொது முகாமையாளர் பேராசிரியர் லால் சந்திரசேன கூறியதாவது: 'தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்துடன் செய்யப்பட்டுள்ள இந்த விசேட ஒப்பந்தத்தின் மூலம் நாட்டின் அரசு ஊழியர்கள் சலுகை விலையில் பல மருத்துவ வசதிகளைப் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் நாட்டுக்காக ஆற்றும் விலைமதிப்பற்ற சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அனைத்து அக்ரஹார காப்புறுதி உறுப்பினர்களுக்கும் உயர்தர சுகாதார நன்மைகளை வழங்க நவலோக மருத்துவமனை குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் உறுப்பினர்கள் ஆரம்ப கொடுப்பனவு எதுவுமின்றி நவலோக மருத்துவமனையின் சேவைகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அக்ரஹார உறுப்பினர்களுக்கு இலவச சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம் மருத்துவ சிகிச்சைக்கான செலவைக் குறைக்க நவலோக மருத்துவமனை குழுமம் வாய்ப்பளித்துள்ளமை விசேட அம்சமாகும். மேலும், அக்ரஹார உறுப்பினர்கள் ஆய்வக பரிசோதனைகள், தலையீட்டு கதிரியக்கவியல் (interventional radiology), இதய நோய் கண்டறிதல், பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு மருத்துவ சேவைகளுக்கும், தங்கும் அறை கட்டணங்களுக்கும் தள்ளுபடியுடன் பணம் செலுத்தும் வாய்ப்பை இந்த ஒப்பந்தம் வழங்குகிறது. இதன் மூலம் வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் இருவருக்கும் பல நன்மைகளைப் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் மருத்துவமனை சேவைகளைப் பெறுவதற்கு இலவச அம்புலன்ஸ் சேவையை உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
தேசிய காப்புறுதி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் அக்ரஹார திட்டம் என்பது இலங்கையில் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கான மிகப்பெரிய சுகாதார காப்புறுதி திட்டமாகும். அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் இந்த அக்ரஹார காப்புறுதி திட்டம் உறுப்பினர்களின் சுகாதார செலவுகளுக்கான நிதி உதவியை வழங்குகிறது. இதன் காரணமாக, அவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சொந்த பணத்தைச் செலவிடாமல் தேவையான சுகாதார சேவைகளைப் பெறும் வாய்ப்பை உறுதி செய்வதன் மூலம், அவர்களின் நல்வாழ்வையும், நிதி பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.