Oct 9, 2024 - 12:10 PM -
0
92ஆவது ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபர்ட் சிரேஷ்ட தடகள சம்பியன்ஷிப் 2024 போட்டிகள் செப்டெம்பர் 30ஆம் திகதி முதல் ஒக்டோபர் 3ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்றன. இந்த போட்டியில், நாட்டின் சிறந்த தடகள வீரர்கள் தமது திறன்கள் மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தனர். ரிட்ஸ்பரி அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போட்டி, இலங்கையின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் வருடாந்தம் நடைபெறும் நிகழ்வாக அமைந்திருப்பதுடன், தடகள சிறப்பையும், விளையாட்டு அம்சங்களையும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.
இலங்கையின் பல்வேறு பாடசாலைகளின் 5000 க்கும் அதிகமான தடகள வீரர்கள் பங்கேற்ற நிகழ்வாக இம்முறை போட்டி நடைபெற்றது.
பெண்கள் பிரிவில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 182 புள்ளிகளைப் பெற்று வெற்றியீட்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து, வத்தளை ஏ ரத்நாயக்க மத்திய கல்லூரி 147 புள்ளிகளையும், நீர்கொழும்பு ஆவே மரியா கன்னியர்மடம் 77 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர். ஆண்கள் பிரிவில், வென்னப்புவ, சென். ஜோசப்ஸ் வாஸ் கல்லூரி 117 புள்ளிகளைப் பெற்று சம்பியன்ஷிப் பட்டத்தையும், இரண்டாமிடத்தை கொழும்பு சென். பெனடிக்ட் கல்லூரி 77 புள்ளிகளுடனும், மூன்றாமிடத்தை நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெலா கல்லூரி 74 புள்ளிகளுடனும் பெற்றுக் கொண்டன.
தனிநபர் பிரிவுகளில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையில் பி.ஆர்.ஏ. திலினி நெத்சலா ராஜபக்ச, 2024 ஆம் ஆண்டின் பெண்கள் பிரிவின் சிறந்த தடகள வீராங்கனையாகவும், வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையின் சந்துன் கோஷல, 2024 ஆம் ஆண்டின் ஆண்கள் பிரிவின் சிறந்த தடகள வீரராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
சாந்தி எஸ்.விஜேசிங்க, இலங்கை தடகள சம்மேளனத்தின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த சம்பியன்ஷிப் வளர்ச்சியிலும், வெற்றிகரமான செயற்பாட்டிலும், ரிட்ஸ்பரி உடனான பங்காண்மை மிகவும் முக்கியமானதாக அமைந்திருப்பதுடன், இளம் மெய்வல்லுநர் சாதனைகளை ஊக்குவிப்பதிலும், சமூகங்களிடையே ஒற்றுமையை கட்டியெழுப்புவதிலும் பங்களிப்பு வழங்குகின்றது.” என்றார்.
CBL ஃபுட்ஸ் இன்டர்நஷனல் பிரைவட் லிமிடெட் பிரதம செயற்பாட்டு அதிகாரி கமல் கீகனகே கருத்துத் தெரிவிக்கையில், “சேர் ஜோன் டாபர்ட் சிரேஷ்ட தடகள சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தொடர்ச்சியாக 12 ஆவது வருடமாகவும் அனுசரணை வழங்குவதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். இளம் தடகள வீரர்களின் ஆற்றல்களில் ரிட்ஸ்பரி நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அவர்களின் வெற்றிக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும்.” என்றார்.
இந்த ஆண்டு, ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபர்ட் சிரேஷ்ட தடகள சம்பியன்ஷிப் 2024, விளையாட்டு பண்பை ஊக்குவித்து, திறமைகளை கட்டியெழுப்பும் வகையில் நிறைவடைந்திருந்தது. இளம் மெய்வல்லுநர்களுக்கு தேசிய மட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பை வழங்கியிருந்ததுடன், சர்வதேச மட்டத்தில் தமது கனவுகளை தொடர ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது. விருதுகள் வழங்கும் நிகழ்வுடன் இந்த சம்பியன்ஷிப் போட்டிகள் நிறைவடைந்ததுடன், சிறப்பாக செயலாற்றியிருந்த தடகள வீரர்களின் சாதனைகள் கௌரவிக்கப்பட்டிருந்தன.