Oct 9, 2024 - 03:06 PM -
0
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் பல இன்று (09) வேட்புமனுக்களில் கையொப்பமிட்டன.
பெலவத்தையில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் அக்கட்சியின் வேட்புமனுக்கள் இன்று கையொப்பமிடப்பட்டன.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்புமனுக்கள் கொழும்பில் உள்ள அந்த கூட்டணியின் அலுவலகத்தில் வைத்து இன்று கையொப்பமிடப்பட்டன.
சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியும் இன்று வேட்புமனுவில் கையெழுத்திட்டது.
கொழும்பு மல் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இன்று பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கையொப்பமிட்டுள்ளது.
அதேநேரம் சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட 33 குழுக்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளன.
இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
இதேவேளை, பொதுத் தேர்தலுக்காக வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க வந்திருந்த SAAC நாடுகளின் கண்காணிப்பாளர்களும் ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 08 நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கைக்கு வர உள்ளனர்.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள், பொதுத் தேர்தல் கண்காணிப்புக்காக தேர்தல் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு கண்காணிப்பாளர்களும் இலங்கைக்கு விஜயம் செய்து பொதுத் தேர்தலை கண்காணிக்க உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.