Oct 9, 2024 - 05:29 PM -
0
தமிழர்களுக்கு இடம்பெற்றுவந்த அநீதிகள் பாராளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும் என்பதற்காக தமிழ் கூட்டமைப்பை தேசிய தலைவருடன் சேர்ந்து உருவாக்கியவன் நான் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆசாபாசங்களுக்கும் பதவிகளுக்காகவும் அடிமையாகி இன்று சுக்கு நூறாகி சிதைவடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே தமிழர்கள் உரிமையை காப்பாற்றுவதற்காக தேசிய ஜனநாயக முன்னணி கட்சியான எமது கட்சி வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்றது என முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தர்.
மட்டக்களப்பு இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேஷங்கள் தற்போது வெளிக் கொண்டு வந்துள்ளது போலி வேஷங்களை போட்டு மக்களை இவ்வளவு காலமும் ஏமாற்றி தேசியம் தேசியம் என பேசி வருகின்ற அரசாங்கத்திடம் இலஞ்சங்களை வாங்கி கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளனர் என இந்த ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு வெளிப்படையாக மக்களுக்கு தெரியவந்துள்ளது.
எனவே மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ஒரு காத்திரமான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் கடந்த காலத்தில் அந்த சந்தர்ப்பங்களை அவர்களுக்கு வழங்கியிருந்தேன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக இருக்கவேண்டும் என நான் அந்த காலத்தில் இடையூறு விளைவிக்கவில்லை தேசிய தலைவருடன் நானும் சேர்ந்து அந்த கட்சியை உருவாக்கியவன்.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் மதுபானசாலை அனுமதிபத்திரம், சொகுசுவாகனங்ககளை வாங்கி வீடுகளை அமைத்தது மட்டுமன்றி வெளிநாடுகளில் வீடுகளை வாங்கிய அமைச்சர்கள் கூட இருக்கின்றனர்.
ஆகவே இந்த நிலையை கருத்தில் கொண்டுதான் இரண்டு முறை பாராளுமன்றத்தில் இருந்திருக்கின்றேன் 22 வருடகாலம் போராடியிருக்கின்றேன் அன்ரன் பாலசிங்கம் தலைமையில் உலகம் முழுக்க பேசியிருக்கின்றேன் ஆனால் இன்றுவரை அதே நோக்கம் சிந்தனையோடு இருக்கின்றோமே தவிர எங்கள் சிந்தனை மாறவில்லை இரண்டுமுறை பாராளுமன்றத்தில் இருந்தாலும் ஒரு சிறு ஊழல் குற்றச்சாட்டை சுமத்தமுடியாது.
பலபேர் என்னிடம் கேட்பார்கள் மதுபானசாலை அனுமதிபத்திரம் எடுத்து நடத்துமாறு நான் ஒன்றில் கூட ஆசைப்படாமல் எங்கள் சொந்த உழைப்பில் அதே சாதாரன குடிமகன் போல் தமிழர்களுக்காக வாழ்ந்து வருகின்றேன் எதிர்காலத்தில் எங்கள் வெற்றியின் பின் தமிழர்களுக்காக கடுமையாக உழைப்போம்.
இரண்டு அமைச்சர்கள் சேவையாற்ற வேண்டும் என விட்டுக் கொடுத்தேன் வாக்குகளை பிரிக்க கூடாது என போராளிகளுக்கு வேண்டுகோளாக விடுத்திருந்தேன் அவர்களை வரவழையுங்கள் என ஆனால் அவர்களின் நடத்தை காரணமாக நாங்கள் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளோம் போராளிகள் அனைவரும் ஒன்றினைந்துள்ளனர் எனவே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களும் அணிதிரண்டு எனது தலைமையின் கீழ் உள்ள எமது கட்சியான கார் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.
--