Oct 11, 2024 - 03:58 PM -
0
தமிழரசுக் கட்சியிலிருந்து ஒரு சிலரின் நன்மைக்காக தமிழ் தேசியத்தை அழிப்பதை விரும்பாததன் காரணமாக தமிழரசு கட்சியிலிருந்து விலகி புதிய ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பை உருவாக்கினோம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் வெளியேறியமைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன அதனை மக்களுக்கு வெளிப்படையாகவே கூற விரும்புகிறேன்.
முதலாவதாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க எடுத்த தீர்மானம் கட்சியின் தீர்மானமாக கருத முடியாது.
ஏனெனில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வவுனியாவில் கலந்துரையாடலுக்கு வருமாறு அழைக்கப்பட்ட நிலையில் அங்கு கலந்துரையாடல் இடம்பெறவில்லை.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு வெள்ளை பேப்பரில் ஏதோ எழுதிக் கொண்டு வந்து சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்தை எடுக்கிறோம் என அவர் தன்னுடைய தீர்மானத்தை கட்சியின் தீர்மானமாக தெரிவித்தார்.
நான் அதைப் பிழை எனக் கூறினேன். கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு கலந்துரையாடல் இடம்பெறாமல் தீர்மானம் எடுக்கும் கூட்டமாக மாறியதால் நான் அது தவறு என சுட்டிக்காட்டி வெளியேறினேன்.
அடுத்ததாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்படதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த குழு கூடவும் இல்லை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடம் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஆராயவும் இல்லை கலந்துரையாடவும் இல்லை.
தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் தெரிவுத் தலைவர் வெளிநாட்டுக்குச் சென்றமை தெரிந்தும் வவுனியாவில் கூட்டம் கூட்டப்பட்டது.
தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான குழு கூடிய போது அதில் வேட்பாளராக சமூக ஊடகங்களில் தங்களை அறிமுகப்படுத்தியவர்கள் தெரிவுக் குழுவில் அங்கம் வகித்தமை முரணான விடயம்.
அது மட்டும் அல்லாது வேட்பாளர் தெரிவிக் குழுவில் மட்டக்களப்பில் இருந்து நான்கு பேரை நியமித்தார்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து எவரையும் நியமிக்கவில்லை.
இவ்வாறு திட்டமிட்ட முறையில் தமிழ் தேசியத்தை அழிப்பதற்காக சிலர் தெற்கு முகவர்களுடன் கைகோர்த்து தமிழரசு கட்சியை அழிப்பதை அதே கட்சியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.
தமிழரசு கட்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் திசை மாறி சென்ற போது முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு பல தடவைகள் சுட்டிக் கட்டிய போதும் அவரால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியவில்லை.
நான் 14 வருடங்கள் தமிழரசு கட்சியில் அங்கம் வகித்தவன் என்ற நீதியில் காட்சியில் எந்த ஒரு பதவியையும் கேட்டுப் பெறவும் இல்லை பணம் சம்பாதிப்பதற்காக கட்சியைப் பயன்படுத்தியதும் இல்லை.
இரண்டு தடவைகள் என்னை தேசியப் பட்டியலில் போட்டார்கள் ஒரு தடவை எனக்குத் தெரியாமலே என்னை தேசியப் பட்டியலில் இருந்து நீக்கி ஒரு பெண்ணை புதிதாக அறிமுகப்படுத்தினார்கள் நான் கட்சியில் போர் கொடி தூக்கவில்லை.
எனது விலகல் சரி என நான் உணர்ந்து கொள்கிறேன் ஏனெனில் நான் விலகிய சில நாட்களுக்குள் தமிழரசு கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜா கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து வெளியேறினார்.
புலம்பெயர் தமிழ் உறவுகள் மற்றும் தமிழரசு கட்சியின் ஆதரவு அணியினர் தமிழரசு கட்சியை விடுத்து புதிய ஜனநாயக தமிழ் அரசு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற இடைவிடாத கோரிக்கையின் காரணமாக தமிழரசு கூட்டமைப்பை உருவாக்கினோம்.
எமது தமிழரசு கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலில் தமிழரசு கூட்டமைப்பாகவே தேர்தலில் களம் இறங்கும்.
நமது கட்சியை வலுப்படுத்துவதற்காக தமிழரசு கட்சியில் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் தமிழரசு கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஆகியோரிடம் இணைந்து பயணிக்க உள்ளனர்.
ஆகவே தமிழரசு கட்சி வீட்டு சின்னம் அழிந்துவிட்டது எனவே தமிழ் தேசியத்தின்பால் பயணிக்கின்ற கட்சிகள் தமிழ் மக்களின் உரிமைக்கான பயணத்தில் எம்முடன் இணைந்து பயணிக்க விரும்பினால் ஒரே மேசையில் இருந்து பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.
--