Oct 13, 2024 - 11:30 AM -
0
பங்களாதேஷிற்கு எதிரான மூன்றாவது t20 போட்டியில் இந்திய அணி வெறும் 3 ஓட்டங்களில் 300 ஓட்டங்களை எட்டும் வாய்ப்பை தவறவிட்டது.
முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த இந்திய அணி 297 ஓட்டங்களை குவிக்க பங்களாதேஷ் அணி 164 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்திய அணியின் அணி தலைவர் சூரியகுமார் யாதவ், அபாரமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தார்.
இந்த தொடர் முழுவதும் பெரிய தாக்கத்தை சூரியகுமார் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா 4 ஓட்டங்களில் வெளியேற, சஞ்சு சாம்சனும் சூரியகுமார் யாதவும் இணைந்து அணிக்கு ஓட்டங்களை குவிந்தனர்.
ஒரு புறம் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஓட்டங்களை குவிக்க அவருக்கு போட்டியாக சூரியகுமார் யாதவ் களத்தில் இறங்கி அசத்தினார். 35 பந்துகளை எதிர்கொண்ட அவர் 75 ஓட்டங்களை குவித்தார். இதில் எட்டு பவுண்டரிகளும், ஐந்து சிக்ஸர்களும் அடங்கும். சூரிய குமார் யாதவ் ஸ்ட்ரைக் ரேட் 214 என்ற அளவில் இருந்தது.
இதன் மூலம் சூரியகுமார் யாதவ், ஒரு சாதனையை படைத்திருக்கிறார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,500 ஓட்டங்களை அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சூரியகுமார் படைத்திருக்கிறார். சூரியகுமார் யாதவ் 71 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
ரோகித் சர்மா 92 இன்னிங்ஸில் 2,500 ஓட்டங்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது சூரிய குமார்யாதவ் முறியடித்திருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு விராட் கோலி 68 இன்னிங்ஸில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2,500 ஓட்டங்கள் அடித்தது தற்போது வரை முதலிடத்தில் இருக்கிறார். இதேபோன்று சூரிய குமார் யாதவ் இந்திய டி20 அணியின் முழு நேர அணி தலைவராக பதவியேற்ற பிறகு தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றியை ருசித்து இருக்கிறார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு சூரிய குமாரும், சஞ்சு சாம்சனும் 173 ஓட்டங்களை சேர்த்தனர். தற்போது டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் வரும் 16 ஆம் திகதி பெங்களூருவில் ஆரம்பாகிறது.