Oct 14, 2024 - 12:46 PM -
0
அமானா வங்கி தனது தொடர்ச்சியான ஏழாவது வருடாந்த பங்கிலாப பிரகடனத்தை அறிவித்துள்ளது. இதுவரை வழங்கப்பட்ட பங்கிலாப பெறுமதிகளில் உயர்ந்த பெறுமதி இதுவாக அமைந்திருப்பதுடன், 2023 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த பங்கிலாப பெறுமதியுடன் ஒப்பிடுகையில் ஏறத்தாழ இரு மடங்காக அமைந்துள்ளது. இம்முறை ரூ. 661 மில்லியனை பங்கிலாபமாக வழங்க முன்வந்துள்ளது.
பங்கொன்றுக்கு ரூ. 1.20 வீதம் இடைக்கால பணப் பங்கிலாபத்தை தனது பங்குதாரர்களுக்கு வழங்குவதுடன், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிந்திய அறிவித்தலினூடாக, 2018 ஆம் ஆண்டு முதல் வங்கியினால் பிரகடனம் செய்யப்பட்ட பங்கிலாபங்களின் மொத்தப் பெறுமதி ரூ. 2 பில்லியனை விட உயர்வானதாக அமைந்துள்ளது. 2024 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று, வங்கி 551,125,746 சாதாரண பங்குகளை வழங்கியிருந்தது.
இந்த பிரகடனம் தொடர்பில் அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பராலி குறிப்பிடுகையில், “2023 ஆம் ஆண்டின் உறுதியான நிதிப் பெறுபேறுகளைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டிலும் சிறந்த பெறுபேறுகளை எம்மால் எய்த முடிந்திருந்தது. எமது பங்குதாரர்களுக்கு தொடர்ச்சியாக பெறுமதியை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைவதுடன், எமது ஏழாவது பங்கிலாப கொடுப்பனவு இதற்கு எடுத்துக்காட்டாகும். பங்குதாரர்களுக்கான வருமதியை மேம்படுத்துவதில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்துவதுடன், வெகுமதிகளை வழங்கும் இந்த போக்கை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கான புதிய வாய்ப்புகளை நோக்கி நாம் நகர்ந்த வண்ணமுள்ளோம்.” என்றார்.
பங்கிலாபம் வெளியீடு பற்றிய அறிவித்தல் தொடர்பில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கியின் உறுதியான செயற்பாடுகளினூடாக, பங்குதாரர்களுக்கு வருமதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான எமது அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், எமது தொடர்ச்சியான ஏழாவது பங்கிலாப பிரகடனத்தை மேற்கொண்டுள்ளமை தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எமது பங்கிலாபம் இம்முறை ஏறத்தாழ இரட்டிப்பாகியுள்ளது. அண்மைய தரப்படுத்தல் BBB-(lka) க்கு உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் காணப்படும் நிலையில், இந்த உறுதியான போக்கை எம்மால் தொடரக் கூடியதாக இருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், எமது பெறுமதி வாய்ந்த பங்காளர்களுக்கு வெகுமதிகளை தொடர்ந்தும் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
2024 முதல் அரையாண்டில் வங்கி வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 1.35 பில்லியனை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 68% வளர்ச்சியாகும். வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 763.4 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 419.6 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 82% அதிகரிப்பாகும். ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வங்கியின் நீண்ட கால தரப்படுத்தலை BB+(lka) இலிருந்து முதலீட்டு தர தரப்படுத்தலான BBB-(lka) என்பதாக உயர்த்தியிருந்ததுடன், உறுதியான புறத்தோற்றத்தை வழங்கியிருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.