Oct 15, 2024 - 07:28 PM -
0
கலால் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (15) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு செவனகல பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயுர்வேத மருந்தகம் ஒன்று சட்டவிரோதமான முறையில் சுற்றிவளைக்கப்பட்டு அதில் கஞ்சா இருந்ததாக சந்தேகத்தின் பேரில் அதன் ஊழியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்தச் செயலின் மூலம் தீங்கிழைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மருந்தகத்தின் உரிமையாளரான கலாநிதி கமல் பந்துல வீரப்பெரும மற்றும் அதன் ஊழியர்கள் நால்வரினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த பின்னர், நீதிபதிகளான பிரிதி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ இந்த தீர்ப்பை அறிவித்தார்.
இதன்படி, பொரளை, கலால் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நிலைய அதிகாரி நந்தன பெரேரா, கலால் பரிசோதகர் திலக் குமார திசாநாயக்க மற்றும் கலால் கட்டுப்பாட்டாளர் என்.எஸ்.ரத்நாயக்க ஆகியோர் மனுதாரர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன்படி, மூன்று அதிகாரிகளும் தலா 04 இலட்சம் ரூபா வீதம் தமது தனிப்பட்ட பணத்தில் இந்த மனுவை சமர்ப்பித்த மருந்தக உரிமையாளர் கலாநிதி கமல் பந்துல வீரப்பெருமவுக்கு வழங்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி சோதனையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட குறித்த மருந்தகத்தின் நான்கு ஊழியர்களுக்கும் பிரதிவாதிகள் மூவரும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் தமது தனிப்பட்ட பணத்திலிருந்து நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மனுதாரர்கள் ஐந்து பேருக்கும் தலா 10,000/- இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், தீர்ப்பின் நகலை குறித்த ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது.
மேலும், பிரதிவாதிகளான மூன்று கலால் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கலால் திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.